Published On: Monday, January 23, 2012
பாடசாலை வான் சாரதிகளுக்கு கட்டுப்பாடு - பொலிஸ் திணைக்களம்

பாடசாலை வான் சாரதிகள் 30 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பதுடன் ஆகக்குறைந்தது 5 வருட அனுபவமும் முதிர்ச்சியும் கொண்டவர்களாக இருக்க வேண்டுமென பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கு பாடசாலை வான் உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை சுமார் 1200 பாடசாலை வான் உரிமையாளர்களுடன் பொலிஸ் அதிகாரிகள் சந்திப்பொன்றை முன்னெடுத்திருந்தனர். இதன் போதே பொலிஸாரின் கோரிக்கைகளை வான் உரிமையாளர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
மேலும் வான் சாரதிகள் சீருடை அணிதல், ஆசனங்களின் இருக்கைகளுக்கு ஏற்ப மாணவர்களை சேர்த்துக்கொள்ளல், மாணவர்களுக்கும் சேர்த்து காப்புறுதி செய்தல், சாரதிகளுக்கு மேலதிகமாக இன்னுமொரு உதவியாளரை வைத்திருத்தல், தேவையேற்படின் பெண் உதவியாளர் ஒருவரையும் வாகனத்தில் வைத்துக்கொள்ளல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதன் போது கலந்துரையாடப்பட்டதுடன் சாரதிகளும் இத்தீர்மானத்திற்கு இணக்கப் பாட்டுக்கு வந்துள்ளனர்.