Published On: Thursday, January 12, 2012
2013 இறுதியில் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறலாம் - டோணி

2013ஆம் ஆண்டு இறுதியோடு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலக போவதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி மறைமுகமாக தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் மகேந்திர சிங் டோணி. இவர் தலைமையிலான இந்திய அணி, கடந்த ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்றியது. டெஸ்ட், ஒருநாள், டுவென்டி20 என்ற கிரிக்கெட்டின் 3 வகையான போட்டிகளிலும், இந்திய அணிக்கு டோணி தலைமையேற்று நடத்தி வருகின்றார்.
இதுவரை மொத்தம் 66 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள டோணி, இதில் 36 போட்டிகளில் கேப்டனாக பணியாற்றி உள்ளார். டோணி தலைமையில் இந்தியா இதுவரை 17 டெஸ்ட் போட்டிகளில் வெற்றிப் பெற்றுள்ளது. பெர்த்தில் நாளை துவங்க உள்ள இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இன்று செய்தியாளர்களுக்கு டோணி பேட்டி அளித்தார். அப்போது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் ஒரு கருத்தை டோணி தெரிவித்தார்.
வரும் 2015ம் ஆண்டு உலகக் கோப்பைக்கு இந்திய அணியை வழி நடத்தும் வகையில் டெஸ்ட் போட்டியில் இருந்து அடுத்த ஆண்டு இறுதியில் தான் ஓய்வு பெற வாய்ப்புள்ளது என்று டோணி தெரிவித்துள்ளார். இது குறித்து இந்திய கேப்டன் டோணி கூறியதாவது,
2015 உலகக் கோப்பை வரை நான் இந்திய அணியில் இருக்க வேண்டுமெனில் ஏதாவது ஒரு வகையான கிரிக்கெட் போட்டியில் இருந்து நான் விலக வேண்டியுள்ளது. இதனால் 2013ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து நான் விலக வாய்ப்புள்ளது. வரும் 2013ல் எனது உடல் தகுதியை பொறுத்து ஏதாவது ஒரு வகையான கிரிக்கெட்டில் முழுமையாக ஈடுபட விரும்புகிறேன்.
ஆனால் 2015ம் ஆண்டு உலகக் கோப்பைக்கு இன்னும் 3 ஆண்டுகள் உள்ளது. அதுவரை என்னால் இந்திய அணியில் நிலைத்து இருக்க முடியுமா என்று தெரியவில்லை. 2013ம் ஆண்டு முடிவில் எனக்கு 2015 உலகக் கோப்பைக்கு முழுதகுதி உள்ளதா என்பதை சோதிக்க வேண்டியுள்ளது.
அடுத்த உலகக் கோப்பை வரை இந்திய அணியில் நான் இருப்பேன் என்று தற்போது கூற முடியாது. வரும் 2014ம் ஆண்டு என்னால் 2015 உலகக் கோப்பை தொடரில் விளையாட முடியாது என்று தோன்றினால், எனக்கு பதிலாக வரும் விக்கெட் கீப்பர் அனுபவம் மிகுந்தவராக இருக்க வேண்டும்.
நான் திடீரென அணியில் இருந்து விலகினால் வெறும் 30 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியவர் உலகக் கோப்பையில் இந்திய விக்கெட் கீப்பராக ஏற்படுத்தப்படுவார். இது இந்திய அணிக்கு உகந்ததாக அமையாது.
எனவே 2013ம் ஆண்டு இறுதியில் எந்த வகையான கிரிக்கெட்டில் தொடரலாம் என்பதை நான் தீர்மானிக்க வேண்டியுள்ளது. எனது முடிவு ஒரு தனிப்பட்ட நபருடையது அல்ல, நாட்டின் அணிக்கு முக்கியமானது. எனக்கு பதிலாக இந்திய அணியில் விக்கெட் கீப்பராக வருபவர் குறைந்தது 60 முதல் 100 ஒருநாள் போட்டிகளில் விளையாடி அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும். அப்போது தான் அவரால் உலகக் கோப்பைக்கு தயாராக செல்ல முடியும் என்பது எனது சொந்த கருத்து என்றார்.