Published On: Thursday, January 12, 2012
இந்திய கடல் எல்லைக்குள் 9 இலங்கை மீனவர்கள் கைது

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 9 பேரை இந்திய கடற்படையினர் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து 2 படகுகள் மற்றும் 2 டன் மீன்களையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து இந்திய கடலோர காவல்படை தலைமையிடம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
இராமேஸ்வரம் கடலில் 57 நாட்டிக்கல் தூரத்தில் ஐ.சி.ஜி.எஸ். விஸ்வஸ்ட் என்ற ரோந்து படகில் இந்திய கடற்படையினர் கடந்த 9ஆம் திகதி ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது இந்திய கடல் எல்லைக்குள் இலங்கை மீனவர்கள் 9 பேர் 2 படகுகளில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அவர்களை சுற்றி வளைத்த இந்திய கடற்படையினர் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
இந்திய கடற்படையால் மடக்கி பிடிக்கப்பட்ட 9 மீனவர்களும், 2 மீன்பிடி படகுகளும் சென்னை துறைமுக பொலிஸாரிடம் புதன்கிழமை காலை ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் 9 இலங்கை மீனவர்களும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 34 இலங்கை மீன்பிடி படகுகளையும், 173 இலங்கை மீனவர்களையும் இந்திய கடற்படையினர் பிடித்துள்ளனர். 30 ஆயிரத்து 555 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து, இந்திய கடல் எல்லை கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று இந்திய கடற்படை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.