Published On: Monday, January 30, 2012
2011/12 பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம் கோரல்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, 2011/2012 கல்வி ஆண்டிற்கான பல்கலைக்கழக அனுமதிக்கென மாணவர்களிடமிருந்து விண்ணப்பம் கோரியுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பல்கலைக் கழகங்களுக்கு புதிதாக மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ளனர். இதற்காக கடந்த வருடம் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி மூன்று பாடங்களிலும் சித்தியடைந்த மாணவர்களை தமது பெறுபேறுகள், தகுதியடிப்படையில் இதற்காக விண்ணப்பிக்க முடியுமெனவும் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்க தெரிவித்தார்.
விண்ணப்பங்கள் அனைத்து புத்தக நிலையங்களிலும் நேற்று முதல் விநியோகிக்கப்படுகின்றன. எதிர்வரும் மூன்று வாரங்களுக்குள் விண்ணப்பங்கள் கொழும்பு 07, வார்ட் பிளேசிலுள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவிற்கு கிடைக்கும் வகையில் பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்குமாறும் ஆணைக்குழுவின் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த வருடம் நடந்து முடிந்த க.பொ.த. உயர்தரத்தில் சித்தியடைந்துள்ள மாணவர்கள் தாம் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதியுடையவர் என நம்பும் பட்சத்தில், விண்ணப்ப படிவங்களைப் பெற்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் அறிவுரைகளுக்கு அமைய தெளிவாக விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்தல் வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதன்படி மாணவன் தான் விரும்பிய அனைத்து பீடங்களுக்கும் முதன்மையடிப் படையில் இலக்கமிட்டு தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டுமெனவும் இதன் மூலம் தாம் பிரதானமாக விரும்பிய பீடம் கிடைக்காத பட்சத்திலும் வேறு பீடங்களுக்கு அவர்கள் தெரிவாக கூடிய வாய்ப்பிருப்பதாகவும் அதன் தலைவர் குறிப்பிட்டார்.
மீள்திருத்தத்திற்காக விண்ணப்பித்திருக்கும் மாணவர்கள் தமக்கு கிடைத்திருக்கும் பெறுபேறின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்க முடியும். பெறுபேறில் பின்னர் மாற்றம் ஏற்படின், அதனடிப்படையில் மேன்முறையீடு செய்வதற்கு கால அவகாசம் வழங்கப்படுமெ னவும் அவர் கூறினார். கிடைக்கப் பெறும் விண்ணப்பங்களுக்கு அமைய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விரைவில் வெட்டுப் புள்ளிகளை வெளியிடுமெனவும் அதன் தலைவர் தெரிவித்தார்.