Published On: Monday, January 30, 2012
மருமகனை பிளேடால் கிழித்த மாமனார்

தனது மகளை அடித்து துன்புறுத்திய மருமகனை மாமனார் பிளேடால் கிழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கொடுங்கையூர் முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் சுந்தர் (வயது 30). அவரது மனைவி வள்ளி, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் சுந்தருக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அப்படி தகராறு ஏற்படும் போதெல்லாம் சுந்தர் தனது மனைவியை அடித்து கொடுமைப்படுத்துவார். கடந்த வாரமும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கணவரிடம் கோபித்துக் கொண்ட வள்ளி கொடுங்கையூர் கட்டபொம்மான் நகரில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டார்.
கடந்த 28ஆம் திகதி சுந்தர் தனது மனைவியை அழைத்துவர மாமனார் வீட்டுக்கு சென்றார். திரும்பவும் வீட்டுக்கு வருமாறு அழைத்தும் வள்ளி வர மறுத்துவிட்டார். இதையடுத்து அவர் தனது மாமனார் குருசாமியை அணுகி வள்ளியை அனுப்பி வைக்குமாறு தெரிவித்தார். அப்போது மாமனார், மருமகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றி மகளை தாக்கிய மருமகனை குருசாமி பிளேடால் முகம், உடலில் பல்வேறு இடங்களில் கிழித்தார்.
இதில் படுகாயம் அடைந்த சுந்தர் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதற்கிடையே குருசாமி தலைமறைவாகிவிட்டார். இந்த சம்பவம் குறித்து கொடுங்கையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப் பதிவு செய்து குருசாமியைத் தேடி வருகிறார்.