Published On: Thursday, February 16, 2012
ஆணைக்குழு அறிக்கையிலுள்ள இராணுவ விடயங்களுக்கென தனியான நீதிமன்றம்

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் இராணுவம் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களை விரிவாக ஆராயவென விசாரணை நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய இந்த விசாரணை நீதிமன்றத்தை அமைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிஹால் ஹப்பு ஆராய்ச்சி தெரிவித்தார்.
கிளிநொச்சி பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் சுதந்த டி சில்வா தலைமையில் ஐந்து இராணுவ உயர் அதிகாரிகள் இந்த நீதிமன்றுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் இராணுவம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பான முழுமையான அறிக்கையை இந்தக்குழு இராணுவத் தளபதியிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
சகல விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்து சம்பந்தப்பட்ட சகல தரப்பினரினதும் வாக்கு மூலங்களை பதிவு செய்த மேற்படி ஆணைக்குழு தமது அறிக்கையை ஜனாதிபதி அவர்களிடம் கையளித்த பின்னர் அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட மேற்படி அறிக்கையில் இராணுவம் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை விரிவாக ஆராயவெனவும் அது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்கும் பொருட்டு கடந்த ஜனவரி மாதம் இராணுவத்தளபதியினால் இந்த விசாரணை நீதிமன்றம் நியமிக்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.