Published On: Friday, February 17, 2012
நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை

கேரள கடல் பகுதியில் மீனவர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து கப்பல் கேப்டனிடம் விசாரணை நடந்து வருகிறது. விசாரணையின் போது, கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டதாக கேப்டன் தெரிவித்துள்ளார். குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே பூத்துறை பகுதியை சேர்ந்தவர் பிரடி. இவருக்கு சொந்தமான விசைப்படகில் அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள், கேரளாவில் மீன் பிடிதொழிலில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த 10 நாட்களுக்கு முன் கேரள மாநிலம் சக்திக்குளங்கரை என்ற இடத்தில் இருந்து, இந்த விசைப்படகில் பூத்துறையை சேர்ந்த பிரடி, மார்ட்டின், ஆன்டனி, இரையுமன்துறையை சேர்ந்த அஜீஸ்பிங்கி, கிளைமான்ஸ், பிரான்சிஸ், அலெக்சாண்டர், கில்சிறியான், முத்தப்பன், ஜான்சன், கில்லாரி மற்றும் கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த செலஸ்டின் என 12 பேர் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர்.
நேற்று முன்தினம் மாலை கொல்லம் அடுத்த நீண்டகரை பகுதியில் இருந்து 35 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியே இத்தாலி நாட்டை சேர்ந்த என்ரிகா லக்சி என்ற சரக்கு கப்பல் வந்துள்ளது. கப்பலில் இருந்தவர்கள் திடீரென விசைப்படகில் மீன்பிடித்து கொண்டு இருந்த மீனவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் படகை ஓட்டி சென்ற கொல்லத்தை சேர்ந்த செலஸ்டின் (45), அருகில் இருந்த இரையுமன்துறையை சேர்ந்த அஜீஸ்பிங்கி ஆகியோர் பலியாகினர். குமரி மாவட்டத்தை சேர்ந்த செலஸ்டின் நீண்டகாலமாக கொல்லத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்து மீன்பிடி தொழில் செய்து வந்தவர். இதன்பின், இந்திய கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்திய இத்தாலி கப்பலை மடக்கினர். அந்த கப்பல் கொச்சி கொண்டு செல்லப்பட்டது. அங்கு கப்பல் கேப்டனிடம் எர்ணாகுளம் போலீசாரும், கடலோர காவல் படையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கப்பல் கேப்டனிடம் நடத்திய விசாரணையில், ‘‘எங்கள் கப்பலுக்கு குறுக்கே திடீரென வந்த விசைப்படகை நாங்கள் கொள்ளை கும்பல் என நினைத்து துப்பாக்கியால் சுட்டோம்' என்று கூறியுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் பலியான அஜீஸ்பிங்கியின் பெற்றோர் ஏற்கனவே இறந்து விட்டனர். 2 தங்கைகள் மட்டுமே உள்ளனர். அஜீஸ்பிங்கியின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர், பிரேத பரிசோதனை முடிந்து நேற்று மாலை உடல் இரையுமன்துறைக்கு கொண்டு வரப்பட்டது.
விமானம் மூலம் தேடுதல்
துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து, இத்தாலி கப்பல் ஊழியர்களே, ‘கடல் கொள்ளையர்களுக்கு எதிராக நாங்கள் துப்பாக்கிசூடு நடத்தினோம்’ என்று கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், மீன்பிடி தொழிலாளர்கள் அளித்த தகவலை தொடர்ந்து கடலோர காவல் படையினர் விமானம் மூலம் நடத்திய தேடுதலை தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்திய கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கேரள அரசு நிவாரணம்
பலியான 2 மீனவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்குவதாக கேரள முதல்வர் உம்மன்சாண்டி நேற்று அறிவித்தார்.