Published On: Friday, February 17, 2012
இலங்கைக்கு கிட்டுமா முதல் வெற்றி

முத்தரப்பு ஒருநாள் தொடரில் அவுஸ்திரேலியா, இலங்கை அணிகள் இன்று இரண்டாவது முறையாக மோதுகின்றன. இதில் இலங்கை அணி எழுச்சி பெற்று முதல் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா, அவுஸ்திரேலியா, இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடர் அவுஸ்திரேலியாவில் நடக்கிறது. இதுவரை நடந்த போட்டிகளின் முடிவில் இந்தியா (10), ஆஸ்திரேலியா (9), முதல் இரு இடத்திலுள்ளன. ஒரு வெற்றியும் பெறாத இலங்கை அணி 2 புள்ளியுடன் கடைசி இடத்தில் உள்ளது.
இதனிடையே இன்று சிட்னியில் நடக்கும் பகலிரவு போட்டியில் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் இரண்டாவது முறையாக மோதுகின்றன.
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் குறைந்த ரன்கள் எடுத்தும் கடைசிவரை போராடிய இலங்கை அணி, இன்று நம்பிக்கையுடன் களம் காணலாம். துவக்க வீரர் தரங்கா கடந்த மூன்று போட்டிகளில் (4, 5, 0) ஒருமுறை கூட இரட்டை இலக்க ரன்களை எட்டவில்லை. இதனால் நெருக்கடிக்குள்ளாகும் தில்ஷன், பேட்டிங்கில் சொதப்பிவிடுகிறார்.
"மிடில் ஆர்டரில் சங்ககரா, ஜெயவர்தனா நிலைத்து விளையாடினால் நல்லது. இரு முறை அரைசதம் அடித்த இளம் வீரர் சண்டிமால், நம்பிக்கை இன்றும் தனது அசத்தலான பேட்டிங்கை தொடர்ந்தால், ஆஸ்திரேலிய அணிக்கு நல்ல இலக்கை நிர்ணயிக்கலாம். "ஆல் ரவுண்டர்கள் மாத்யூஸ், பெரேரா கிடைத்த வாய்ப்பை வீணடிக்கின்றனர். திரிமான்னேவுக்கு இன்று இடம் கிடைக்குமா என்று தெரியவில்லை.
பீல்டிங் சொதப்பல்:
பவுலிங்கில் மலிங்கா, கடைசி நேரத்தில் ரன்குவிப்புக்கு தடைபோடுவது, அணிக்கு பெரும் பலம். அதேநேரம், குலசேகரா, தம்மிகா பிரசாத் போன்றவர்கள் விக்கெட் வீழ்த்த தடுமாறுவது எதிரணிக்கு பலமாகிறது. சுழலில் ஹெராத், சேனநாயகே இந்த போட்டியில் எழுச்சி பெற்றாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
பாண்டிங் கேப்டன்:
வழக்கமான கேப்டன் கிளார்க் ஓய்வு காரணமாக, பாண்டிங்கிற்கு பொறுப்பு சென்றுள்ளது. இதில் தன்னை மீண்டும் நிரூபிக்க, பேட்டிங்கில் சாதிக்க முயற்சிக்கலாம். டேவிட் வார்னருடன் மாத்யூ வேட் மறுபடியும் அணிக்கு துவக்கம் தருவார் என நம்பப்படுகிறது. புதிய வீரர் பீட்டர் பாரஸ்ட் இன்றும் அணியில் இடம் பெறுவது உறுதி. கிறிஸ்டியன், மிட்சல் மார்சுடன் டேவிட் ஹசி தனது ரன் வேட்டையை தொடர காத்திருக்கிறார்.
பவுலிங் பலம்:
ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சுக்கு மெக்கே, மிட்சல் ஸ்டார்க் பலம் சேர்க்கின்றனர். சுழற் பந்தில் தோகர்டி கடந்த முறை போல, இலங்கை அணிக்கு சிக்கல் தருவார் என்று தெரிகிறது.
இலங்கை அணி இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளில் 2 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது. இதனால் பைனல் வாய்ப்பை தக்கவைக்க, இன்றைய போட்டியில் வென்றாக வேண்டிய நிலை உள்ளது. அதேநேரம் ஆஸ்திரேலியாவும் எளிதாக விட்டுத்தராது என்பதால், இன்று விறு விறுப்புக்கு பஞ்சமிருக்காது.
தோல்வி அதிகம்
சிட்னியில், இலங்கை அணி விளையாடிய 15 போட்டிகளில் 10ல் தோல்வியடைந்துள்ளது. 5 போட்டியில் மட்டுமே வென்றுள்ளது.
* இங்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பங்கேற்ற 11 போட்டிகளில் 9ல் தோற்றது. கடைசியாக விளையாடிய (2010) போட்டியில் இலங்கை அணி வென்றது.