Published On: Tuesday, February 14, 2012
நடு வீதியில் வாகன சாரதிக்கு தலையில் 50 குட்டு

மதுரையில் சாலை நடுவில் வேனை நிறுத்திச்சென்ற டிரைவருக்கு போக்குவரத்து எஸ்ஐ நூதன தண்டனை வழங்கினார். மதுரை அண்ணா பஸ் ஸ்டாண்ட் போக்குவரத்து மிகுந்த பகுதிகளில் ஒன்று. இங்குள்ள திருவள்ளுவர் சிலை அருகே நேற்று சாலையின் நடுவில் திண்டுக்கல்லை சேர்ந்த ராஜேஷ் என்பவர் வேனை நிறுத்தி விட்டு கடைக்கு சென்றுவிட்டார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்களில் வந்தவர்கள் தடுமாறி சாலையை கடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த போக்குவரத்து எஸ்ஐ ஜெயச்சந்திரன், நடுரோட்டில் வேன் நிற்பதைக்கண்டு, வேன் நம்பரை குறிப்பிட்டு டிரைவரை மைக் மூலம் அழைத்தார். அங்கு வந்த டிரைவர் ராஜேசுக்கு அபராதம் விதிப்பதாக தெரிவித்தார். ஆனால் ராஜேஷ் தன்னிடம் பணமில்லை என கூறினார். இதைத்தொடர்ந்து, அவரது ஓட்டுனர் உரிமத்தை பெற்றுக்கொண்டு, அவரது தலையில் அவரே 50 முறை குட்டிக்கொள்ளுமாறு ராஜேசுக்கு எஸ்ஐ, நூதனை தண்டனை வழங்கினார்.
இதனையடுத்து ராஜேஷ் தனது தலையில் தானே 50 முறை குட்டிக் கொண்டார். பின்னர் அவரிடம் லைசென்சை திருப்பிக்கொடுத்த எஸ்ஐ ஜெயச்சந்திரன், அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார். இதுகுறித்து டிரைவர் ராஜேஷ் கூறுகையில், ‘‘இது போன்ற தவறை இனிமேல் செய்ய மாட்டேன். இது எனக்கு நல்ல பாடம்‘‘ எனக்கூறி புலம்பியபடியே அங்கிருந்து சென்றார்.