Published On: Tuesday, February 14, 2012
அவமதிப்பு வழக்கில் கிலானி குற்றவாளி

நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த மறுத்த பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி குற்றவாளி என்று அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது. அவமதிப்பு வழக்கு விசாரணையை வரும் 22ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது. பாகிஸ்தான் பிரதமராக பெனாசிர் புட்டோ இருந்த போது, ஒரு கான்ராக்ட் அளித்ததில் அவரும், அவரது கணவர் ஆசிப் அலி சர்தாரியும் 6% கமிஷன் பெற்று அதை சுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக 1998ம் ஆண்டில் ஒரு ஊழல் வழக்கு தொடரப்பட்டது. இதில் சுவிட்சர்லாந்திலும் விசாரணை நடந்தது.
இதன்பின், முஷாரப் அதிபரானதும் ஒரு அவசரச் சட்டத்தின் மூலம் ஊழல் வழக்குகளில் சிக்கியவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. இதனால், பெனாசிர், சர்தாரியின் மீதான வழக்குகள் முடிக்கப்பட்டன. இப்போது பாகிஸ்தான் அதிபராக சர்தாரி உள்ளார். இந்நிலையில், முஷாரப் கொண்டு வந்த சட்டத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது. மேலும், சர்தாரி மீதான ஊழல் வழக்கு விசாரணையை தொடரும்படி சுவிட்சர்லாந்துக்கு கடிதம் அனுப்புமாறு பிரதமர் யூசுப் ரசா கிலானிக்கு உத்தரவிட்டது. ஆனால், கிலானி இதை செயல்படுத்தவில்லை. இதனால், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுத்து சுப்ரீம் கோர்ட் விசாரித்தது.
இதைத் தொடர்ந்து, கடந்த மாதம் 19ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் கிலானி ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்த அவமதிப்பு வழக்கு, நீதிபதி நஷீர் உல் முல்க் தலைமையிலான 7 நீதிபதிகள் பெஞ்ச் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. ‘அவமதிப்பு வழக்கில் கிலானி குற்றவாளி’ என்று குறிப்பிட்டு குற்றப்பத்திரிகையை அவரிடம் நீதிபதிகள் அளித்தனர்.
பின்னர் கிலானியிடம், ‘குற்றத்தை ஒப்புக் கொள்கிறீர்களா’ என நீதிபதி நஷீர் கேட்டார். அதற்கு கிலானி, ‘இல்லை, அதிபருக்கு வழக்கு விசாரணைகளில் விலக்கு உள்ளது, அதனால், அவர் மீது விசாரணை நடத்த முடியாது’ என்றார்.
இதன்பின், கிலானி மீதான குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் வழக்கை நடத்துமாறு அட்டர்னி ஜெனரல் மவுலவி அன்வருள் ஹக்குக்கு நீதிபதி உத்தரவிட்டார். வரும் 27ம் தேதி சாட்சிகள் விசாரணை நடத்த உத்தரவிட்ட நீதிபதி, அவமதிப்பு வழக்கு விசாரணையை வரும் 22ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
முன்னதாக, கிலானி நீதிமன்றத்துக்கு வரும் போது அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் அங்கு கூடியிருந்தனர். கிலானி ஆஜராவதையொட்டி, கோர்ட் அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
* பாகிஸ்தானில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்கும் 3வது பிரதமர் கிலானி. இதற்கு முன்பு ஜுல்பிகர் அலி புட்டோ, நவாஸ் ஷெரிப் ஆகியோர் அவமதிப்பு வழக்கை சந்தித்துள்ளனர். புட்டோ மீதான வழக்கு பின்னர் கைவிடப்பட்டது. நவாஸ் ஷெரிப் மன்னிப்பு கேட்டதால் வழக்கு முடிக்கப்பட்டது.
* அவமதிப்பு வழக்கில் ‘குற்றவாளி’ என்று அறிவிக்கப்பட்ட முதல் பிரதமர் கிலானி. ‘பாகிஸ்தான் வரலாற்றில் இது துயரமான நாள்’ என்று ஆளும்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் செய்தி தொடர்பாளர் கமார் ஜமான் கைரா கூறினார்.
* கிலானி குற்றவாளி என இறுதி தீர்ப்பு அளிக்கப்பட்டால், அவருக்கு 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும். பதவி பறிபோவதுடன் 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடும் தகுதியையும் இழப்பார்.
* கிலானிக்கு சுப்ரீம் கோர்ட் தண்டனை அளித்தாலும், அதை ரத்து செய்ய அதிபருக்கு பாகிஸ்தான் அரசியல் சட்டத்தில் அதிகாரம் உள்ளதாக சில சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். எனினும், சுப்ரீம் கோர்ட் தனக்கு மன்னிப்பு அளிக்கும் என கிலானி எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்.