Published On: Friday, February 10, 2012
அடுத்த தேர்தலை முன்வைத்து சேவை செய்யவில்லை - அமைச்சர் உதுமாலெப்பை
(அமைச்சின் ஊடகப் பிரிவு)
பொத்துவில் பிரதேச நீர்ப்ப்பாசன பிரச்சினைகளுக்கு தீர்வினை எட்டும் முகமாக நீப்பாசன உயர் அதிகாரிகளுடன் பொத்துவிலுக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் உதுமாலெப்பை மேற்கண்டவாறு கூறினார்.
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும் கிராமிய மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தலைமையில் பொத்துவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற வைபவத்தில் அமைச்சர் மேலும் கூறுகையில், நான் ஒருபோதும் அடுத்த தேர்தலில் நீங்கள் எனக்கு வாக்குப்போட வேண்டும் என்ற எண்ணக் கருவோடு சேவையாற்ற வரவில்லை. மாறாக இறைவனின் நாட்டத்தால் தேசிய காங்கிரஸின் தலைமையினால் வழங்கப்பட்ட அமானிதமே கிழக்கு மாகாண அமைச்சு பதவியாகும்.
அந்த அமானிதத்தை கொண்டு எனது இறைவனுக்கு பயந்து இன, மத பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் சேவையாற்றி வருகின்றேன். அடுத்த தேர்தலில் வெற்றி பெறலாம் அல்லது தோல்வியுறலாம் அதுவல்ல விடயம் கொடுக்கப்பட்ட பொறுப்பை சரிவர செய்தாயா என இறைவன் கேட்பான் அதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும். வீதி போட்டேன், வாய்க்கால் தோண்டினேன் எனக்கு வாக்கு போடுங்கள் என்று ஒரு போதும் வரமாட்டேன். அதிகாரங்கள் கையில் இருக்கும்போது மக்களின் தேவைகளை நிறைவேற்ற என்னால் முடியுமான முயற்சிகளை செய்த வண்ணமே உள்ளேன்.
அரசியல் அதிகாரம் கையை விட்டு பிரிந்த பின்னர் யோசித்து பலன் இல்லை. கடந்த காலங்களிள் எமது பிரதேசத்தில் அரசியல் அதிகாரம் இல்லாமல் போனதால் அதிகாரமுள்ளவர்களை சந்திப்பதற்கு பஸ்ஸில் பல நாட்களை செலவு செய்தும் உரிய வேலைகள் வெற்றியளிக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பியவையும் எம் மக்கள் மறக்கக் கூடாது.
தேசிய காங்கிரஸின் தேசிய தவைரும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்கள் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய அமைச்சாக இதனை தேர்ந்தெடுத்தார். அரசியல் அதிகாரம் இல்லாத பிரதேசங்களுக்கு அதிகாரங்களை வழங்க வேண்டும் என்ற கொள்கையில் அக்கரைப்பற்று மக்கள் கூடுதலான வாக்குகளை அளித்தனர்.
இதனால் கிடைக்கப்பட்ட அமைச்சு பதவியை கொண்டு முழு கிழக்கு மாகாணத்திற்கும் சேவை புரிந்து வருகின்றேன். கடந்த 30 வருடங்களாக யுத்தத்தினாலும் இயற்கை அனர்த்தத்தினாலும் பாதிப்புற்ற எமது கிழக்கு மாகாண மக்கள் இன்று சுதந்திர காற்றைக் சுவாசித்து வருகின்றனர்.
பொத்துவில் மக்களின் பொருளாதார அபிவிருத்தியைக் கட்டி எழுப்பும் முயற்சியின் ஓர் அங்கம்தான் இந்த கலந்துரையாடலாகும். பொத்துவில் பிரதேசத்தை எனது சொந்த பிரதேசம் போல் எண்ணி அபிவிருத்தியில் முன்னுரிமைப்படுத்தவுள்ளேன்.
ஜெய்கா திட்டத்தில் பல வீதிகளை அமைத்தும் வருகின்றோம். வெளிநாட்டு நிதிகள் வானத்தால் வருபவைகள் அல்ல எந்த நாட்டின் நிதியானாலும் இலங்கை அரசின் அனுமதியோடும் திட்டத்திற்கு பொறுப்பான அமைச்சுக்களின் மேற்பார்வையோடும்தான் அமுல்படுத்தப்படும். பல குளங்களுக்கு உரிமையாளர்கள் யார் என்பதை இனங்கான வேண்டும். மத்திய அரசிடம் கேட்டால் அது மாகாணத்திற்கு சொந்தம் எனவும் மாகாணத்திடம் கேட்டால் மத்திய அரசும் என்பார்கள். குளங்களின் தந்தை யார் என்பது இனம்காணப்பட வேண்டும். அதனை இனம்கண்டு பிள்ளையை தந்தையிடம் ஓப்படைக்க வேண்டும். அனாதைகளாக இருக்க ஒரு நாளும் அனுமதிக்க கூடாது.
பாரிய வேலை திட்டங்களை வெளிநாட்டின் நிதிகளை கொண்டு அமுலாக்க வேண்டியுள்ளது. வெளிநாட்டு நிதி கிடைக்கப்பட்ட உடனே வேலைகள் ஆரபிக்கப்படும். சிறிய குளங்களையும் நீர்ப்பாசனத் திட்டங்களையும் உடன் ஆரம்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு பிறபித்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும் கிராமிய மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம். அன்சார் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சரின் இணைப்பு செயலாளர் பதுர்கான், மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் எஸ்.திலகராஜா, பொத்துவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, அம்பாரை மாவட்ட நீர்ப்பாசண பணிப்பாளர் ஐ.எல்.அலியார், அம்பாரை மாவட்ட பிரதி நீர்ப்பாசண பணிப்பாளர் யு.எல்.ஏ.நசார், பிரதேசசபை தவிசாளர், பொறியியலாளர்கள், மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
பிரதேச மக்களினால் நீர்ப்பாசனம் தொடர்பாக கொடுக்கப்பட்ட முறைப்பாடுகள் உடனுக்குடன் தீர்க்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.