Published On: Sunday, February 12, 2012
அஷ்ரப்பின் மரணம் விபத்தா, சதியா? அரசு வெளிப்படுத்தவேண்டும்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபின் மரணம் ஒரு விபத்தா அல்லது ஒரு சதியா என்பதை தற்போதாவது அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான பசீர் சேகுதாவூத் வலியுறுத்தியுள்ளார். காத்தான்குடியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபின் மரணம் தொடர்பில் இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு பாரிய சந்தேகம் உள்ளது.
அஷ்ரபின் மரணம் தொடர்பில் ஆராய்வதற்கு நியமித்த விசாரணை ஆணைக்குழு தமது அறிக்கையினை சமர்ப்பித்து பல ஆண்டுகளாகியும் இன்னும் அந்த குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்படவில்லை. அந்த அறிக்கையை அரசாங்கம் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என அரசாங்கத்திடம் நான் கேட்கின்றேன்.
இந்த நாட்டில் யுத்தம் முடிவடைந்து சமாதானம் ஏற்பட்டுள்ள இன்றைய காலகட்டத்தில் மறைந்த தலைவர் மர்ஹ¥ம் அஷ்ரபினது மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். அவரின் மரணம் தொடர்பான சந்தேகங்கள் உள்ளன. இவரின் மரணம் சதியா அல்லது விபத்தா என்பதை அறிய வேண்டியுள்ளது.
இன்று எல்லா முஸ்லிம் கட்சிகளும் அரசாங்கத்துடன் இணைந்ததன் பின்பும் முஸ்லிம்களின் பலம் என்ன? ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் சேர்ந்த பின்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ¤க்கு உரிய அபிவிருத்தியின் பங்கு சரியாக கிடைத்துள்ளதா என்பதை நாம் கேட்க வேண்டியுள்ளது. முஸ்லிம் கட்சிகளுக்குள் இருக்கின்ற முஸ்லிம்களின் ஆணையைப் பெற்ற பெரிய முஸ்லிம் கட்சி என்ற வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு உரிய அபிவிருத்தியின் பங்கை சரியாக அரசாங்கம் வழங்க வேண்டும்.
அரசாங்கம் 18ஆவது திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தபோது அதற்கு முதன்முதலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கியது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு வழங்கினர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாக வருவதற்கு அவரை வெற்றியடையச் செய்வதற்கு காங்கிரஸ் ஆதரவையும் இதன் மூலம் வழங்கியுள்ளது. இந்நிலையில் அபிவிருத்தியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு உரிய பங்கை அரசாங்கம் வழங்க வேண்டும்.