Published On: Friday, February 10, 2012
மாலைதீவு நஷீத் குடும்பத்துக்கு இலங்கை அடைக்கலம்

(முஹம்மட் பிறவ்ஸ்)
மாலைதீவை விட்டு குடும்பத்தோடு வெளியேறிய அந்நாட்டின் முன்னாள் அதிபர் நசீத் இலங்கையில் அடைக்கலம் கோரியுள்ளார். இத்தகவலை நசீத்தின் மனைவி உறுதிபடுத்தியுள்ளார். தஞ்சம் கோருவது தொடர்பாக மாலைதீவை விட்டு வெளியேறும் முன்பு மகிந்த ராஜபக்ஷவிடம் தாம் தொலைபேசியில் உரையாடியதாகவும் அவர் கூறியுள்ளார்.
மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீத்தை கைது செய்யுமாறு அந்நாட்டு குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததையடுத்தே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து மாலைதீவு புதிய அதிபர் வகீத்திடம் பேசிய ராஜபக்ஷ, நசீத் குடும்பத்தினரை பாதுகாப்பாக அனுப்பி வைக்குமாறு கோரியதாகவும் தெரிகிறது. இதனிடையே தாம் துப்பாக்கி முனையில் பதவி விலக வைக்கப்பட்டதாக நசீத் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நாட்டின் மனைவியும் இரண்டு குழந்தைகளும் பாதுகாப்புக் கருதி இலங்கை வந்துள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் தெரிவித்தார். இவர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்கக்கோனுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.