Published On: Friday, February 24, 2012
இந்திய அழகியின் 'திகில்' படம்

2007-ம் ஆண்டு உலக அழகிப்போட்டியில் கலந்துகொண்ட இந்திய அழகி சிந்தூரா ஒரு திகில் படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். இந்த படத்துக்கு, `திகில்' என்றே பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
ஒதுக்குப்புறமான ஒரு கிராமத்தில், வைர சுரங்கம் இருப்பதை அரசாங்கம் கண்டுபிடித்து, அதுபற்றி ஆராய்வதற்காக ஒரு நிபுணர் குழுவை அனுப்புகிறது. மூன்று நாட்களுக்கு ஒருவர் வீதம் நிபுணர் குழுவை சேர்ந்தவர்கள் காணாமல் போகிறார்கள். அவர்கள் என்ன ஆனார்கள்? என்பது மர்மமாக இருக்கிறது.
காணாமல் போன நிபுணர்களை கண்டுபிடிக்க, ஒரு பெண் சி.பி.ஐ. அதிகாரி வருகிறார். அவர் துப்பு துலக்கும்போது, மனித குலத்துக்கே சவால் விடுவது போல் அதிர்ச்சிகரமான தகவல் தெரியவருகிறது.
இப்படி சஸ்பென்ஸ்-திகில் கலந்த படமாக, `திகில்' தயாராகியிருக்கிறது. சி.பி.ஐ. பெண் அதிகாரியாக சிந்தூரா நடித்துள்ளார். அவருடன் பரணி, நிழல்கள் ரவி, பொன்னம்பலம், ராமிரெட்டி, சம்பத்ராஜ், ஷர்மிளா, ரிஷா ஆகியோரும் நடித்துள்ளனர்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி நாகேஷ் ராமையா டைரக்டு செய்துள்ளார். ஹெச்.எம்.டி.பிக்சர்ஸ் சார்பில் வி.ராவணன் தயாரித்து இருக்கிறார்.