Published On: Tuesday, February 14, 2012
எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
(புத்தளம் செய்தியாளர்)
எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து சிலாபத்தைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மண்ணெண்ணை விலை 35 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது. இதற்கு முன்னர் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது. ஆகவே, 45 ரூபாவால் அதன் விலை குறைக்கப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இதனால், எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்படும் வரையில் மீனவர்கள் கடலுக்கு தொழிலுக்கு செல்லப் போவதில்லை என்றும் மேலும் தெரிவித்தனர்.

நீர்கொழும்பு - சிலாபம் பிரதான வீதி குடாப்பாடு, ஏத்துக்கால கொச்சிக்கடை, வென்னப்புவ, மாரவில, சிலாபம் போன்ற இடங்களில் பிரதான வீதிகளை மறித்தும் மீனவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்கள் பலர் குடும்பத்துடன் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையை காணக்கூடியதாக இருந்தது. வீதிகளில் டயர்களை எரித்தும், சிறிய மீன்பிடி படகுகளை வீதியில் இட்டு எரித்தும் பாரிய மரக்கட்டைகளையும், கொங்கிரீட் தூண்களையும் வீதிகளில் தடைகளாக இட்டும், கனரக வாகனங்களையும் அரசாங்க போக்குவரத்து பஸ்களையும் வீதியில் குறுக்காக நிறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் வீதியை முற்றாக மறித்ததுடன் மீனவர்களும் வீதிக்கு குறுக்காக அமர்ந்னர். இதன் காரணமாக வீதிப்போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருந்தது.


