Published On: Monday, February 13, 2012
'சென்னை ரைனோஸ்' மீண்டும் சம்பியன் (படங்கள் இணைப்பு )

சீசீஎல் இன் 2ஆவது பருவமாக இடம்பெற்ற திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்கும் இருபதுக்கு 20 நட்சத்திர கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 13ஆம் திகதி ஷார்ஜாவில் கோலாகலமாகத் ஆரம்பமானது. இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மும்பை மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்த திரைப்பட நட்சத்திரங்கள் 6 அணிகளாக பங்குபங்கிற்றினர்.
இதில் இறுதிப் போட்டிக்கு தெரிவான சென்னை ரைனோஸ் மற்றும் கர்நாடகா புல்டோசர் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை ரைனோஸ் அணியின் தலைவர் விஷால் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார். இதன்படி களமிறங்கிய சென்னை ரைனோஸ் அணி விக்ராந்தின் அரைச்சதத்துடன் 4 விக்கட்டுக்களை இழந்து 161 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
சிறப்பாக துடுப்பெடுத்தாடிய விக்ராந்த் 5 ஓட்டங்களினால் சதத்தை நழுவ விட்டார். 14 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் அடங்கலாக 69 பந்துகளில் ஆட்டமிழக்காது 95 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
பின்னர் 162 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய கர்நாடகா புல்டோசர் அணி 7 விக்கட்டுக்களை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்று ஒரு ஓட்டத்தினால் சம்பியன் பட்டத்தை இழந்தது. கர்நாடகா புல்டோசர் சார்பாக துருவா (58 ஓட்டங்கள்) மற்றும் கார்த்திக் (51 ஓட்டங்கள்) அரைச்சதங்களை பெற்றுக்கொண்டர்.
இறுதி ஓவரில் 10 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் சிறப்பாக பந்து வீசிய விக்ராந்த் 2 விக்கட்டுக்களை கைப்பற்றி சென்னை அணியை ஒரு ஓட்டத்தினால் த்ரில் வெற்றி பெறச் செய்தார்.
இறுதிப் போட்டியில் சகல துறைகளிலும் பிரகாசித்த விக்ராந்த் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
இப்போட்டியில் சுனில் செட்டி, ராதிகா, சரத்குமார், காஜல் ஆகர்வால், சோனியா ஆகர்வால் என மேலும் பல முன்னணி நட்சத்திரங்களும் கலந்து கொண்டு நட்சத்திரங்களை உற்சாகப்படுத்தினர்.
சென்னை ரைனோஸ் அணி விபரம் : விஷால் (அணித்தலைவர்), ஆர்யா, ஜீவா, விக்ராந்த், சாந்தனு, பாலாஜி, ரமணா, விஸ்னு, ப்ருத்வி, சிவா, கார்த்திக் குமார்.


