Published On: Sunday, February 19, 2012
திரைத் தாரகை 'கிம் சர்மா'வோடு சில நிமிடங்கள்

கென்ய தொழிலதிபர் அலி பஞ்சானியை கரம் பிடித்து அந்நாட்டிலேயே செட்டிலாகிவிட்ட இந்தித் திரைத் தாரகை கிம் சர்மா, திருமணத்துக்குப் பின் தனது வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டதாகக் கூறுகிறார்.
தோழிகளான சக நடிகைகளை சந்திக்க மும்பை வந்திருந்த கிம் சர்மா, திருமண வாழ்க்கை பற்றி சொல்கிறார்...
``எங்கள் திருமணம் முடிந்து ஓராண்டாகிவிட்டது. எனது தாம்பத்ய வாழ்க்கைப் பயணம் அற்புதமானதாக சென்று கொண்டிருக்கிறது. கடந்துபோன ஒவ்வொரு வினாடியையும் ரசித்து ருசித்திருக்கிறேன்.
என் வாழ்க்கை திருப்பத்தில் ஏற்பட்ட முக்கிய விஷயம் என்னவென்றால், நான் ஒரு ஓட்டலுக்கு உரிமையாளராக ஆகி இருக்கிறேன். ஒரு நடிகையான என் முந்தைய வாழ்க்கைக்கும், ஓட்டல் ஓனராக தற்போதைய வாழ்க்கைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அந்த வித்தியாசம்தான் நான் சிறந்த அனுபவங்கள் பொருந்திய ஒரு பெண்ணாக மாற உதவியிருக்கிறது.
எனது வாழ்க்கையல் ஏற்படும் ஒவ்வொரு வித்தியாசத்தையும் நான் அனுபவித்து ரசிக்கிறேன். முன்பு சுதந்திரமான தனி மனுஷி. தற்போது திருமணமான பெண். அப்படிப் பார்த்தால் என் வாழ்க்கை தலைகீழாக மாறி இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். நிறையப் பொறுப்புகள் வந்திருக்கின்றன. முழுக்க முழுக்க இது ஒரு புது வாழ்க்கை'' என்று வார்த்தைகளில் சிலிர்ப்பை வெளிப்படுத்துகிறார் கிம் சர்மா.
`நடிக்காமல் இருப்பதை ஒரு இழப்பாக கருதுகிறீர்களா?'
``இல்லை... இல்லவே இல்லை! ஆனால் நான் கென்யாவில் இருக்கும்போது, இந்தியாவில் உள்ள என் குடும்பத்தை சந்திக்க முடிவதில்லை. அதைத்தான் ஒரு இழப்பாக கருதுகிறேன். சில நண்பர்களைப் பிரிந்திருக்கும் வருத்தமும் ஏற்படுகிறது. ஆனால் எனக்கு பிரியமானவர்களோடு இப்போதும் தொடர்பில்தான் இருக்கிறேன்.
நான் நடித்துக் கொண்டிருந்தபோது, இந்தித் திரையுலகின் அங்கமாக இருந்து அந்த வாழ்க்கையை அனுபவித்தேன். தற்போது தொழிலதிபராக இருக்கும் வாழ்க்கையை அனுபவிக்கிறேன். மறுபடியும் சினிமாவுக்கு திரும்பும் திட்டம் எதுவும் என்னிடம் இல்லை''
`மும்பையில் ஓட்டல் திறக்கும் ஆசை இருக்கிறதா?'
``இப்போதைக்கு மும்பையில் ஓட்டல் எதுவும் தொடங்கும் எண்ணம் எனக்கில்லை. கென்யாவிலேயே அதிகக் கவனம் செலுத்தவும், தொழிலை விரிவாக்கவும் விரும்புகிறேன். ஆப்பிரிக்காதான் இப்போது எனது வீடு''
சரி.. குழந்தை எப்போது பெற்றுக்கொள்வீர்கள்?
``இப்போதைக்கு எங்களின் ஓட்டல்கள்தான் எனது குழந்தைகள். மிக அழகான இடங்களில் அமைந்துள்ள அந்த ஓட்டல்கள் ஷூட்டிங்குக்கு மிகவும் ஏற்றவை. எனவே ஆப்பிரிக்கா மொம்பாசாவுக்கு வரும் திரைத் துறையினர் எங்களை ஞாபகம் வைத்துக்கொள்ளலாம்'' என்று, தொழில் ரீதியாக பேசுகிறார்.
`ஆப்பிரிக்காவில் உங்களை மிகவும் கவர்ந்த விஷயம் எது?'
``காடுகள். அதுதான் ஆப்பிரிக்கா! ஆப்பிரிக்கக் கண்டம் முழுவதும் காடுகள் அடர்ந்தது, அழகானது. காடுகளில்தான் வாழ்க்கை தொடங்கியது. அங்குதான் வாழ்க்கை முடியவும் செய்கிறது''- என்று தத்துவத்தை உதிர்க்கிறார்.