Published On: Thursday, February 23, 2012
முஷாரப்பை கைது செய்தே தீருவோம்

முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ கொலை வழக்கில் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பை கைது செய்தே தீருவோம் என்று பாகிஸ்தான் அரசு நேற்று அறிவித்தது. பெனசிர் கொலையில் தனக்கு தொடர்பில்லை என்று முஷாரப் மறுத்துள்ளார். இதுகுறித்து இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் நேற்று கூறியதாவது:
முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ கொலையில் முஷாரப் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவர் தேடப்படும் குற்றவாளி என்று பாகிஸ்தான் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அவரை கைது செய்ய பாகிஸ்தான் அரசு உறுதியாக உள்ளது. முஷாரப் வெளிநாட்டில் பதுங்கியிருப்பதால், சர்வதேச போலீசான இன்டர்போல் உதவியுடன் விரைவில் அவர் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் கொண்டு வரப்படுவார். அவருக்கு கைது வாரன்ட் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ரகுமான் மாலிக் கூறினார். பெனாசிரின் சொந்த இடமான சிந்து மாநிலத்தில் ரகுமான் மாலிக் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அது பல மணி நேரம் நீடித்தது. பாகிஸ்தானில் 2008ல் பொது தேர்தல் நடந்தது. அதற்கு முன்பு வரை வெளிநாட்டில் வசித்து வந்த பெனாசிர் புட்டோ, தேர்தலில் பங்கேற்க 2007 டிசம்பரில் நாடு திரும்பினார். தற்கொலைப் படை மற்றும் துப்பாக்கி சூட்டில் அவர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பெனாசிர் புட்டோ கொலையில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று முஷாரப் மறுத்துள்ளார். ரகுமான் மாலிக் பேட்டிக்கு பிறகு லண்டனில் அவர் கூறுகையில், ‘‘பெனாசிர் என்னை எதிரியாக நினைத்ததில்லை. பெனாசிரின் பாதுகாப்பை அவரது கட்சியினரே பார்த்துக் கொண்டனர். எனவே, பெனாசிரை கொலை செய்தது யார் என்று அவரது கணவர் ஆசிப் அலி சர்தாரிக்கே தெரியும்’’ என்றார்.