Published On: Thursday, February 16, 2012
எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராக 'தேசிய பெண்கள் அமைப்பு'
(யு.கே.காலித்தீன்)
தற்போது அதிரித்துள்ள எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராக போராடுவதற்கு 'தேசிய பெண்கள் அமைப்பு' எனும் பெயரில் நேற்று புதன்கிழமை கொழும்பில் ஒரு புதிய அமைப்பு ஆரம்பித்துவைக்கப்பட்டது.

அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருட்களின் விலை, மின் கட்டணம் போன்றவற்றின் விலையேற்றத்தினைக் குறைத்து இந்நிலைமையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு, அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளதோடு உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்தபோது, அரசாங்கம் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளதாகவும் இவ்வமைப்பினால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஊடகவியலாளர் மாநாடு ஒன்று நேற்று கொழும்பில் இடம்பெற்றது. எரிபொருள் விலையேற்றத்தினால் அதிகளவில் பெண்களே பாதிக்கப்படுவதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும் இதற்காக அனைவரும் கட்சி, இன, மத பேதங்களை மறந்து ஒன்றிணைந்து போராட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அனோமா பொன்சேகா, ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோசி சேனநாயக்க, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சார்பாக விசாகா தர்மதாஸ மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சல்மா ஹம்சா ஆகியோர் கலந்துகொண்டனர்.