Published On: Friday, February 10, 2012
விமான தாக்குதலில் அல்-குவைதா தலைவர் பலி
அமெரிக்காவின் ஆளில்லாத விமானம் தாக்குதல் நடத்தியதில், பாகிஸ்தானின் அல்-குவைதா தலைவர் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர். காஷ்மீரில் முன்னர் செயல்பட்டு வந்த ஹர்கத்துல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த பதார் மன்சூர் தற்போது, பாகிஸ்தானின் வாஜிரிஸ்தான் மாகாணத்தில் நடமாடி வந்தார். பாகிஸ்தானின் அல்-குவைதா தலைவராக செயல்பட்டு வந்த மன்சூர், ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்களுக்கு பயங்கரவாதிகளை சப்ளை செய்து வந்தார். இதனால், அமெரிக்கா இவரை தேடி வந்தது.
இந்நிலையில், வாஜிரிஸ்தானில் உள்ள மிரான்ஷா பகுதியில், அமெரிக்காவின் ஆளில்லாத விமானம் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியதில், மன்சூர் உள்ளிட்ட நான்கு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் கடந்த இரண்டு நாட்களாக ஆளில்லாத விமானங்கள் நடத்திய தாக்குதலில், 10 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.