Published On: Sunday, February 19, 2012
பாகிஸ்தானில் மனித குண்டு தாக்குதல்; 26 பேர் பலி

பாகிஸ்தானில் நடைபெற்ற மனித வெடிகுண்டு தாக்குதலில், 26 பேர் உடல் சிதறி பலியாயினர். 50 பேர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தானில் பழங்குடியினர் வசிக்கும் குர்ரம் பகுதியில் ஷியா , சன்னி பிரிவு முஸ்லிம்களுக்கு இடையில் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. பராசினார் நகரில் மசூதிக்கு அருகே உள்ள மார்க்கெட் பகுதிக்கு நேற்று பைக்கில் வந்த மர்ம நபர், தனது உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தான். இந்த தாக்குதலில் மார்க்கெட்டில் இருந்த ஷியா பிரிவு முஸ்லிம்கள் 23 பேர் உடல் சிதறி பலியாயினர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
அப்பகுதியில் இருந்த 8 கடைகள் குண்டுவெடிப்பில் இடிந்து தரைமட்டமானதாக உள்ளூர்வாசி ஒருவர் தெரிவித்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மேலும் 3 பேர் பலியாயினர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபான் தீவிரவாத அமைப்பிலிருந்து பிரிந்த ஒரு அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பின் தலைவர் பாசல் சயீத் ஹக்கானி கூறுகையில், சன்னி பிரிவு முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதால் ஷியா பிரிவினரை குறிவைத்து இந்த தாக்குதலை நடத்தினோம் என்றார்.