Published On: Sunday, February 19, 2012
64ஆவது பிறந்த நாளில் 64 ஜோடிகளுக்கு திருமணம்

இந்திய முதல்வர் ஜெயலலிதாவின் 64ஆவது பிறந்த நாளையொட்டி 64 ஜோடிகளுக்கு அதிமுக சார்பில் இன்று இலவசத் திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. ஜெயலலிதாவின் மணி விழா அதாவது 60ஆவது பிறந்த நாளிலிருந்து ஆண்டுதோறும் ஏழை ஜோடிகளுக்கு அதிமுக சார்பில் இலவசத் திருமணம் நடத்தி வைக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில், இந்த ஆண்டு 64 ஜோடிகளுக்கு இலவசத் திருமணம் செய்துவைக்கப்படுகிறது.
Zெபப்ரவரி 24ஆம் திகதி முதல்வரின் 64ஆவது பிறந்தநாள் வருகிறது. இதையொட்டி இன்று இந்த இலவசத் திருமணங்கள் நடைபெறுகின்றன. காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 64 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடக்கிறது. இந்த திருமணங்களை ஜெயலலிதா நடத்தி வைக்கிறார். மணமகன் கையில் அவர் தாலியை எடுத்துக்கொடுக்க, அவர்கள் கெட்டிமேளம் முழங்க மணமகள் கழுத்தில் தாலியை கட்டுகிறார்கள்.
இதற்காக தமிழ்நாடு முழுவதும் இருந்து ஏழை திருமண ஜோடிகளை தேர்ந்தெடுத்து வரவழைக்கப்பட்டுள்ளனர். அனைவரும் அமரும் வகையில் பிரமாண்ட மேடை போடப்பட்டுள்ளது. திருமணம் முடிந்ததும் முதல்வர் ஜெயலலிதா திருமண தம்பதிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்குகிறார். மணமகனுக்கு பட்டு வேட்டி-சட்டை, மணமகளுக்கு பட்டு சேலை, 4 கிராம் தங்க தாலி ஆகியவை வழங்கப்படுகிறது. இவை தவிர முதல்வரின் பிறந்தநாளை குறிக்கும் வகையில் குடும்பம் நடத்துவதற்கு தேவையான 64 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்படுகிறது.