Published On: Saturday, February 25, 2012
இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றிபெறுமா?

(ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்)
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக இலங்கை மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக வீதிக்கு வந்துள்ள நிலையில் மறுபுறம், சர்வதேச சமூகமானது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் மீது அழுத்தங்களை அதிகரித்துள்ளது. கடந்தவாரம் இலங்கை சென்றிருந்த அமெரிக்காவின் இரு முக்கிய அதிகாரிகள் பகிரங்கமாக வெளிப்படுத்திய கருத்துக்கள் மூலம், இலங்கை அரசாங்கம் எதிர்கொள்ளும் சர்வதேச நெருக்கடிகளை எம்மால் அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது.
உலக பொலிஸ்காரனாக வர்ணிக்கப்படும் அமெரி்க்காவானது கடந்த 3 வாரங்களுக்கிடையில் தனது நாட்டு முக்கிய அதிகாரிகள் சிலரை இலங்கைக்கு அனுப்பியிருந்தது. இருந்தபோதும் கடந்தவாரம் இலங்கை சென்றிருந்த அமெரிக்க வெளியுறவுத்துறையின் பொது மக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான சார்நிலைச் செயலாளர் மரியா ஓட்டோரே இவர்களில் குறிப்பிடத்தக்கவராவார்.
ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஆட்சியிலிருந்த 2005ஆம் ஆண்டில் இலங்கைக்கு சென்றிருந்த அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் கொலின் பவலுக்கு பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்யும் மிகவுயர்ந்த அமெரிக்க அதிகாரியாக மரியா ஓட்டோரே விளங்கியிருக்கிறார்.
இவருடன் அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான உதவி ராஜாங்கச் செயலர் ரொபர்ட் பிளேக்கும் இலங்கை சென்றிருக்கிறார். இவர்கள் இருவரும் இலங்கை தொடர்பில் வெளிப்படுத்திய கருத்துக்கள், குறிப்பாக ஜெனீவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்படுமென அவர்களின் அதிகாரபூர்வ திட்டவிட்டமான அறிவிப்பு, இதுதொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெளிப்படுத்திய பிரதிபலிப்பு மற்றும் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் வெற்றிபெறுமா என்பது பற்றியும் சுருக்கமாக ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
அமெரிக்கா உயர் அதிகாரிகளின் இலங்கை விஜயம் தொடர்பில் ஏற்கனவே ஒரு எதிபார்ப்பு நிலவியிருந்தது. இந்நிலையில் இலங்கை சென்ற அமெரிக்க அதிகாரிகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றுடன் முக்கிய பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளனர். இப்பேச்சுக்களில் பேசப்பட்ட விடயங்களைவிட அவ்விரு அமெரிக்க உயர் அதிகாரிகளும் கொழும்பில் ஊடகவியலாளர் வெளிப்படுத்திய கருத்துக்கள்தான் இங்கு பிரதானம் பெறுகின்றன.
அதேநேரம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவையும் இலங்கைக்கான தமது விஜயத்தின்போது சந்தித்து கலந்துரையாடியுள்ளனர் அமெரிக்க உயர் அதிகாரிகள். அத்துடன் அமெரிக்க உயர் அதிகாரிகள் இலங்கை தொடர்பில் வெளிப்படுத்திய கருத்துக்கள் குறித்து அமைச்சர் விமல் வீரவன்சவும் கடுமையான எதிர் விமர்சனம் மேற்கொண்டுள்ளதுடன், ராஜிவ் காந்தி படுகொலையுடன் அமெரிக்காவின் உளவுத்துறை தொடர்புபட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார். விமல் வீரவன்சவின் இந்த கூற்றுக்கள் தொடர்பில் இந்திய ஊடகங்கள் மிகமுக்கியத்துவம் வழங்கி செய்திகளை வெளியிட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ஜெனீவா தீர்மானம் வெற்றிபெறுமா?
அதேவேளை சுவிஸ்சர்லாந்து ஜெனீவா நகரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் குறித்த கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டுவரவுள்ளமையும் உறுதியாகியுள்ளது. இலங்கைக்கு எதிராக இப்போது இரண்டரை வருடங்களுக்கு முன்னர் ஐரோப்பிய நாடுகள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தீர்மானம் கொண்டு வந்தன. எனினும் அத்தீர்மானம் வெற்றிபெறவில்லை. அந்தவகையில் இம்முறை அமெரிக்கா இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் கொண்டுவரும் தீர்மானம் வெற்றிபெறுமா என்ற கேள்வி எழுகிறது.
இப்போது இரண்டரை வருடங்களுக்கு முன்னர் சர்வதேச சமூகம் இலங்கை தொடர்பில் கொண்டிருந்த நிலைப்பாட்டுக்கும் தற்போதைய நிலைப்பாட்டுக்கும் நிறைய வித்தியாசங்கள் காணப்படுகின்றன. அன்று ஐரோப்பிய நாடுகள் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்தபோது இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு சில வாரங்களேயாகியிருந்தன. இதனால் யுத்தச் சம்பவங்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியிருக்கவில்லை. ஆனால், தற்போது யுத்தச் சம்பவங்கள் பற்றிய பல தகவல்கள் வெளியே கசிந்து அவை தொடர்பில் விசாரணை அவசியமென்ற கோரிக்கையும் பரவலாக உள்ளது.
அடுத்தது யுத்தம் முடிவடைந்து இரண்டரை வருடங்களாகியும் இதுவரை அரசாங்கமானது அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கவில்லை. நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதிலும் முழுமையான வெற்றி கிட்டவில்லை. நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைத்த விடயங்களும் அமுல்படுத்தப்படவில்லை. எனவே, சர்வதேச சமூகமானது இலங்கை தொடர்பில் அதிருப்தியில் காணப்படுவதை ஒப்புக்ககொண்டாக வேண்டும்.
மற்றைய முக்கிய விடயமானது இம்முறை ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டுவருவது உலகப் பொலிஸ்காரன் அமெரிக்காவாகும். உலகளாவிய ரீதியில் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி உறுப்பு நாடுகளை தனது பக்கம் சாய்க்கவும், இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு வலுசேர்க்கவும் அமெரிக்கா அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்ளும் எனலாம். இதனால் இலங்கைக்கு ஆதரவான அரபு மற்றும் ஆபிரிக்க நாடுகள்கூட அமெரிக்காவுக்கு ஆதரவாகவும், இலங்கைக்கு எதிராகவும் திரும்பக்கூடிய சாத்தியத்தையும் நாம் குறைத்து மதிப்பிடமுடியாது.
ஆகமொத்தத்தில் இம்முறை ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் இலங்கைக்கு மிகப்பெரும் சவால் நிறைந்ததாக அமையும். இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம் வெற்றிபெறுமா என்பதே தற்போதுள்ள மிகமுக்கிய கேள்வி எனலாம்.