Published On: Saturday, February 25, 2012
ஜெயலலிதா பிறந்த நாள்; இலவச மருத்துவ முகாம்

(இந்தியாவிலிருந்து சாஹுல் ஹமீது)
தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, ஸ்ரீரங்கம் தொகுதி சோமரசம்பேட்டையில் நடந்த பிரம்மாண்ட இலவச மருத்துவ முகாமில், 4,800 பெண்கள் உட்பட, 8,222 பேர் பங்கேற்றனர். அ.தி.மு.க., பொதுச்செயலரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின், 64வது பிறந்தநாளையொட்டி, அவரது ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள, சோமரசம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் பிரம்மாண்ட இலவச மருத்துவ முகாம் நடந்தது.
மாவட்ட அமைச்சரும், புறநகர் மாவட்டச் செயலரும், ஸ்ரீரங்கம் தொகுதி பொறுப்பாளருமான சிவபதி, மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்.அப்பல்லோ குழுமம் சீனியர் துணைத் தலைவர் டாக்டர் பிரேம்குமார், முதுநிலை பொதுமேலாளர் சேகர், மதுரை அப்பல்லோ மருத்துவ இயக்குனர் டாக்டர் ரோகிணி, மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் நாகராஜ் தலைமையில், 150 டாக்டர்கள் மற்றும், 300 நர்ஸ்கள் முகாமில் பங்கேற்றனர். கண், சிறுநீரகம், நுரையீரல் பிரச்னைகள், இதய நோய், நீரிழிவுநோய் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நோய் வகைகளை கண்டறிய, அதிநவீன உபகரணங்கள் முகாமில் இடம்பெற்றிருந்தன.
அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், 480 பேருக்கும், எக்கோ ஸ்கேன், 360 பேருக்கும், ஈ.சி.ஜி., 1,815 பேருக்கும், ரத்தம் மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனை, முகாமுக்கு வந்த, 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செய்யப்பட்டது.முதல்வரின் விரிவான காப்பீடுத் திட்டத்தின்கீழ், இதய ஆபரேஷன், பிளாஸ்டிக் சர்ஜரி உள்ளிட்ட சிகிச்சைகளுக்கு, தமிழகத்தின் பல்வேறு பிரபல மருத்துவனைகளுக்கு, 125 பேர் பரிந்துரைக்கப்பட்டனர். "மொத்தம், 4,800 பெண்கள் உட்பட, 8,222 பேர் மருத்துவ முகாமினால் பயனடைந்தனர்.
ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள அனைத்து பகுதி மக்களும் முகாமில் பங்கேற்கும் வகையில், வாடகை வேன்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஒவ்வொரு பகுதிகளில் இருந்தும், வீட்டு வாசலிலேயே ஏற்றப்பட்ட மக்கள், பரிசோதனை முடிந்த பின்னர் மீண்டும் வீட்டு வாசலிலேயே இறங்கிக்கொண்டனர்.