Published On: Friday, February 10, 2012
மாநகரசபை உறுப்பினர் மீதான தாக்குதலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
(கலாநெஞ்சன்)
நீர்கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கபில சுலோச்சன மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று வியாழக்கிழமை முற்பகல் 10 மணியளவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் பேரணியும் இடம்பெற்றது. மாநகர சபை உறுப்பினர் கபில நந்தன சுலோச்சனவின் ஆதரவாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் மாநகரசபை உறுப்பினர்கள் சிலரும் ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
நீர்கொழும்பு அங்குருகாரமுல்ல விகாரை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ஒன்று கூடினர். பின்னர் அங்கிருந்து பேரணியாக சென்று நீர்கொழும்பு மாநகர சபை முன்பாக வந்தடைந்து மாநகர சபை முன்பாக பிரதான வீதியில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை இதுவரை பொலிஸார் கைது செய்யாமை தொடர்பிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பு கோசங்களை எழுப்பினர் .
நீர்கொழும்பு பொலிஸார் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதுடன் வீதிப்போக்குவரத்தையும் சீர்செய்தனர். நீர்கொழும்பு மாநகர சபையின் இந்தமாத அமர்வு நேற்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமான நிலையிலேயே, இந்த ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றது.
நீர்கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கபில நந்தன சுலோச்சன கடந்த மாதம் 31ஆம் திகதி அங்குருகாரமுல்ல விகாரை முன்பாக வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரு நபர்களினால் கத்தியால் குத்தப்பட்டு நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.