Published On: Friday, February 10, 2012
இந்தியாவில் சிறைவைக்கப்பட்ட 15 இலங்கை மீனவர்கள் நாடு திரும்புகின்றனர்

இந்தியாவில் சிறை வைக்கப்பட்டிருந்த 15 இலங்கை மீனவர்கள் இன்று நாடு திரும்புகின்றனர். நிரஞ்சலா, சம்பா-06, கப்பில புத்தா-04 ஆகிய மூன்று படகுகளும் அதில் பயணம் செய்திருந்த 15 இலங்கை மீனவர்களுமே இன்று கடல் மார்க்கமாக நாடு திரும்பவுள்ளனர்.
இவர்களை ஆந்திர மாநிலத்தின் கரையோர பாதுகாப்பு அதிகாரிகள் நண்பகல் 2 மணியளவில் மேற்படி மூன்று படகுகளையும் காங்கேசந்துறையிலுள்ள இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைப்பாரென மீன்பிடித்துறை மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சின் அதிகாரியொருவர் கூறினார்.
இம்மீனவர்கள் 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் திகதி திருமலை மீன்பிடித்துறை முகத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றிருந்தனர். ஆந்திர கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடிக்கச் சென்றார்கள் என்ற குற்றச்சாட்டில் ஆந்திர அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
ஆந்திர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மேற்படி இலங்கை மீனவர்கள் அந்நாட்டு சட்ட திட்டங்களுக்கமைய அபராதம் செலுத்திய பின்னர் விடுதலை செய்யப்பட்டிருப்பதாகவும் அவ்வதிகாரி குறிப்பிட்டார்.