Published On: Tuesday, February 14, 2012
தோட்டத் தொழிலாளர்களால் முகாமையாளர் சிறைப்பிடிப்பு

தோட்ட முகாமையாளரை வெளியேற்றக்கோரி, 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பதுளைப் பகுதியின் அட்டாம்பிட்டி பெருந்தோட்டத்திலேயே இவ்வேலை நிறுத்தப் போராட்டம் இடம்பெற்றது. போராட்டம் ஆரம்பமாகி, சில மணி நேரத்திற்குள் மேற்படி தோட்ட முகாமையாளர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களினால் சிறைவைக்கப்பட்டுள்ளார்.
மல்வத்தவெளி பிளாண்டேசன் பொறுப்பிலியங்கும் மேற்படி அட்டாம்பிட்டி பெருந்தோட்டத்தின் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இ.தொ.க. இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கம், மலையக தொழிலாளர் முன்னணி உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சார்ந்தவர்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
தோட்ட முகாமைத்துவத்தின் தான்தோன்றித்தனமான ஏதேச் சதிகார செயல்பாடுகள், தோட்டத் தொழிற்சாலை இயங்காமை, கூட்டு ஒப்பந்தத்தை மீறி செயல்படுகின்றமை, தோட்டப் பிரச்சினைகள் தொடர்பான தோட்டமட்ட தொழிற்சங்கத் தலைவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தோட்ட முகாமையாளரை தோட்டத்தை விட்டு வெளியேற்றும்படி கோரியே மேற்படி வேலை நிறுத்தப் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
மேற்படி கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடருமென்றும், அதுவரை தோட்ட முகாமையாளரை விடுவிக்கமாட்டோ மென்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.