Published On: Saturday, February 25, 2012
கொழும்பு - மதுரைக்கிடையே ஏப்ரலில் மிகின்லங்கா விமான சேவை

(இந்தியாவிலிருந்து சாஹுல் ஹமீது)
ஏப்ரல் 13ஆம் திகதிக்குள் கொழும்பு - மதுரை இடையே, மிகின்லங்கா விமான சேவை தொடங்கவுள்ளதாக அதன் தலைமை செயல் அதிகாரி கபிலா சந்திரசேனா தெரிவித்துள்ளார். தொழில் வர்த்தக சங்கம் சார்பில், கொழும்புக்கு நேரடி விமானங்களை இயக்குவது குறித்து கலந்தாய்வுக் கூட்டம் மதுரையில் நடந்தது.
தென் மாவட்டங்களைச் சேர்ந்த, 1.80 கோடி பேர், மதுரை விமான நிலையத்தை நம்பியுள்ளனர். தினமும், நூற்றுக்கணக்கான பயணிகள் இலங்கை, மத்திய கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் செல்கின்றனர். சென்னை, திருச்சி விமான நிலையம் வழியாகச் செல்வதால், தேவையற்ற கால விரையம் ஏற்படுகிறது. வாரத்திற்கு, 1,200 பயணிகள் கொழும்பு செல்கின்றனர். தமிழ்ப் புத்தாண்டு பரிசாக, நேரடி விமானம் விட வேண்டும் என்று சங்கத்தின் தலைவர் ஜெகதீசன் தெரிவித்தார்.
மிகின்லங்கா ஏர்லைன்ஸ் ஊழியர்கள், சென்னை, திருச்சியில் உள்ளனர். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 28, மிகின்லங்கா ஏர்லைன்ஸ் இரண்டு விமானங்களை இயக்குகின்றன. மிகின் ஏர்லைன்ஸ் தற்போது, காசி, வாரணாசிக்கு விமானங்களை இயக்குகிறது. பயணிகள் போக்குவரத்து மூலம் வருவாய் கிடைக்கிறது. மதுரைக்கு முதலில், வாரம் ஒரு முறையாக, விமானம் இயக்கப்படும். பயணிகள் வரவேற்பை பொறுத்து, அதன் சேவை அதிகரிக்கப்படும். கட்டணம் 2,500 ரூபாய் இருக்கும் என்று கபில சந்திரசேனா கூறினார்.