Published On: Sunday, February 12, 2012
இங்கிலாந்து இளவரசரை கொல்ல தலிபான் சபதம்

பிரிட்டனில் விமான படை பைலட் பயிற்சி பெற்ற இளவரசர் ஹாரி, ஆப்கனில் ராணுவ விமான பைலட்டாக செயல்பட்டால், அவரை கொல்லப் போவதாக தலிபான் தீவிரவாத அமைப்பு சபதம் செய்துள்ளது. இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் - மறைந்த இளவரசி டயானாவின் இளைய மகன் ஹாரி. வயது 27. மூத்த மகன் வில்லியம் சமீபத்தில் தனது நீண்ட நாள் காதலி கேத் மிடில்டனை திருமணம் செய்தார். ஹாரி, இங்கிலாந்து விமானப் படையில் சேர்ந்தார். அங்கு போர் விமான பயிற்சி முடித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தலிபானுக்கு எதிரான தாக்குதலில் இங்கிலாந்து விமானப் படையும் ஈடுபட்டுள்ளது. அங்கு 4 மாத பைலட் பணியில் அவர் அனுப்பப்பட உள்ளதாக டெய்லி மெயில் நாளேடு செய்தி வெளியிட்டது. இதையறிந்த தலிபான் தீவிரவாதிகள், ஆப்கனுக்கு அவர் வந்தால் ஹாரியை உயிருடன் பிடிப்போம் அல்லது கொலை செய்வோம் என்று சபதம் செய்துள்ளனர். டெய்லி டெலிகிராப் இதழுக்கு தலிபான் செய்தி தொடர்பாளர் சபியுல்லா முஜாகித் அளித்த பேட்டியில், ‘‘ஆப்கனிஸ்தானில் அத்துமீறுவோர் மீது தாக்குதல் தொடரும். எங்கள் வலிமை அனைத்தையும் திரட்டி இளவரசர் ஹாரியை பிடிப்போம். சிக்கினால் மற்ற கைதிகளை போல நடத்துவோம். உயிருடன் பிடிக்க தவறினால் கொலை செய்வோம்’’ என்றார்.