எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Sunday, February 12, 2012

'முல்லைப் பெரியாறு' தீர்க்கக்கூடியது என்ன?

Print Friendly and PDF


முல்லைப் பெரியாறு பிரச்னை தற்போது உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் இருக்கிறது.  32 ஆண்டு பிரச்னைக்கு தீர்வு காண உதவியாக தனது அறிக்கையை  நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் குழு இந்த மாதத்துக்குள் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளது.  அறிக்கை மீது  இரு மாநில வழக்கறிஞர்களின் வாதம் மற்றும் கருத்துகள் பரிமாறப்பட்ட பின் தீர்ப்பு கிடைக்கும். இந்த சூழ்நிலையில்,  கேரள காங்கிரஸ் (மாணி) கட்சி, புதிய அணை கட்ட வேண்டும் என்ற கோஷத்தை முன்வைத்து கேரளாவில் உண்ணாவிரதம், போராட்டத்தை அறிவித்து கடந்த 7ம் தேதி முதல் நடத்தி வருகிறது.

கேரளாவைச் சேர்ந்த நடுநிலையாளர்கள் சொல்வது என்ன?  கேரள உயர் நீதிமன்றத்தின் வழக்கறிஞர் காளீஸ்வரம் ராஜ், முல்லைப் பெரியாறு அணை: தீர்க்கக்கூடிய ஒன்றே என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில், தமிழகம், கேரளாவைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் முல்லைப் பெரியாறு பிரச்னையில் அர்த்தமில்லாத பிரசாரத்தையும் வாக்குவாதம் செய்வதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். 

புதிய அணை ஒன்றே தான் தீர்வு என்ற சாத்தியமில்லாத பிடிவாத நிலையை கேரளா மாற்றிக் கொள்ள வேண்டும். ஏனெனில் கீழ்க்கண்ட மூன்று காரணங்களால் இது சாத்தியமில்லை.

1. அணை இருக்கும் பகுதி நிலநடுக்கம் உள்ள பகுதி என்று வாதிடப்படுகிறது. அப்படி உள்ள ஒரு பகுதியில் புதிய அணை கட்டினால் அதன் பாதுகாப்பை எப்படி உறுதி செய்ய முடியும். பிரச்னை தொடரத்தானே செய்யும்.

2. முல்லைப் பெரியாறு ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்றால், ஓர் அணையின் சராசரி ஆயுட்காலம் 80 ஆண்டுகள் என்று எடுத்துக் கொண்டால், எஞ்சிய 873 ஆண்டுகள் காலத்துக்கு குறைந்தபட்சம் 11 அணைகள் கட்ட வேண்டும். சாத்தியமா இது?   சமூக - சுற்றுச்சூழல் விளைவுகளையும் ஏற்படுத்தும். கிரீன் பீஸ் மூவ்மென்ட் மற்றும் பிற சுற்றுச்சூழல் இயக்கத்தினரின் உலகளாவிய கோஷமே, வனப்பகுதியில் புதிய பெரிய அணை வேண்டாம் என்பது தான்.

3. புதிய அணை கட்டினால், அதை கட்டிமுடிக்க பல ஆண்டுகள் ஆகும். அது தற்போதைய சூழ்நிலையில், உடனடி தேவையை நிறைவு செய்வதாக இருக்காது. இந்த காரணங்கள் எல்லாவற்றையும் கேரள அரசும் அரசியல்வாதிகளும் புரிந்து கொள்ள வேண்டும். 

முல்லைப் பெரியாறு பிரச்னையில் போராட்டம் நடத்தி வந்த பேராசிரியர் சி.பி.ராய், பொறியாளர் சி.ஆர். நீலகண்டன் ஆகியோர் மற்றொரு சுரங்கம் (ஜிஹிழிழிணிலி) தோண்டுவதன் மூலம் பிரச்னைக்கு தீர்வு காணலாம் என்று தெரிவித்துள்ளனர். கேரளாவில் பிரபலமான அறிவியல் இயக்கமான கேரள சாஸ்திரா சாகித்ய பரிஷத்தும் (கே.எஸ்.எஸ்.பி.) இதே யோசனையை தெரிவித்துள்ளது. இந்த தீர்வு தொழில்நுட்ப ரீதியிலும் சுற்றுச்சூழல் ரீதியிலும் சாத்தியமானதே. பாதிப்பு எதுவும் ஏற்படாது.

கூடுதல் சுரங்க திட்டத்தின் மூலம் தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை தர முடியும். பாதுகாப்புக்காக அணை யின் நீர்மட்டத்தையும் குறைக்கலாம். தற்போது உள்ள அணையை நீர்த்தேக்க அணையாக இல்லாமல் தண்ணீரை திசை திருப்பும் அணையாக பயன்படுத்தலாம். மேலும் தமிழகத்துக்கு தண்ணீர் தருவதற்காக அணையில் கூடுதலாக ஒரு சுரங்கம் அமைக்கும் திட்டத்தை தமிழக விவசாய அமைப்புகளும் ஏற்றுக் கொள்ளும் சூழ்நிலை நிலவுகிறது என்று காளீஸ்வரம் ராஜ் குறிப்பிட்டுள்ளார்.

அணை பலமாக உள்ளது முல்லைப் பெரியாறு அணை பலமாகதான் இருக்கிறது. அப்படியே அணை உடைந்தாலும் அதிலிருந்து வெளியேறும் தண்ணீரால் பாதிப்பு ஏதும் இல்லை.  வெள்ள நீரை ஏற்றுக் கொள்ளும் திறன் இடுக்கி அணைக்கு உள்ளது என்று கேரள அரசின் அட்வகேட் ஜெனரல் தண்டபாணி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்த தகவலையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அணை உடையாது என்பது கேரள அரசுக்கு நன்கு தெரியும். இல்லை என்றால் நீர்த்தேக்கத்தில் சுற்றுலாப் பயணிகளுக்காக மூன்று அடுக்கு படகுகளை இயக்குவார்களா?.  பிரச்னை உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் இருப்பதால் தமிழகத்தில் அமைதி நிலவுகிறது. தென் தமிழகத்தின் வாழ்வாதாரமே முல்லைப் பெரியாறை நம்பி தான் உள்ளது. எனவே உச்ச நீதிமன்றத் தின் தீர்ப்பை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.  ஆனால், இந்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி, கேரளாவில் பிரச்னையை திசை திருப்பும் முயற்சியை அரசியல்வாதிகள் மீண்டும் தொடங்கியுள்ளனர். 
இது தமிழகத்தில் நிலவும் அமைதி சூழலை பாதிக்கலாம்.

எடுத்துச் சொல்லுங்கள்



கேரளாவைச் சேர்ந்த பெரிய தொழிலதிபர்கள் பலர் தமிழகத்தில் முன்னணியில் உள்ளனர். ஜூவல்லரி, டிஸ்டிலரி, டயர் மற்றும் கட்டுமான தொழில்களில் பெரிய அளவில் உள்ளனர். அதேபோல், சாதாரண நிலையிலும் ஏராளமானவர்கள் சிறிய டீ கடை, பேக்கரி முதல் நடுத்தர மளிகை கடைகள் வரையில் வைத்து வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். 
இவர்கள் எல்லோரும் தாம் சார்ந்துள்ள அமைப்புகள் மூலம் கேரள அரசியல் தலைவர்களிடம், நடுநிலையாளர்கள் சொல்வதையும், நீதிமன்றம் சொல்வதையும் கேட்கச் செய்ய வேண்டும். அப்போதுதான் இரு மாநிலங்களுக்கு இடையிலான பிரச்னையை சுமூகமாக தீர்க்க முடியும். நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் நிலை நிறுத்த முடியும் என்பதும் நடுநிலையாளர்கள் கருத்து. 

1,849 நாள் தொடர் போராட்டம் நடத்தியவர் என்ன சொல்கிறார்?

முல்லைப் பெரியாறு பிரச்னையில் 1,849 நாட்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திய பேராசிரியர் சி.பி. ராய், இப் பிரச்னை குறித்து 5 மாவட்ட பெரியார் பாசன விவசாய¤கள் சங்கத்தின் தலைவர் கம்பம் கே.எம். அப்பாஸ் மற்றும் நிர்வாகிகளுடன் சந்தித்து பேசினார். அப்போதுதான் முல்லைப் பெரியாறின் உண்மை நிலையை அறிந்தார். தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்.   தரையிலிருந்து 50 அடி உயரத்தில் கூடுதல் சுரங்கத்தை தோண்டும் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் பிரச்னைக்கு சுலபத் தீர்வு காணலாம் என்று தெரிவித்தார். அவர் போன்று கேரளாவில் உள்ள நடுநிலையாளர்கள் சொல்லும் யோசனைகளை கேரள அரசியல்வாதிகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளாமல், சாத்தியமே இல்லாத புதிய அணை திட்டத்தை முன்வைப்பதும், பிரச்னையை தெருவுக்கு கொண்டு சென்று மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி குறுகிய ஆதாயம் பெறுவதிலும் தான் இருக்கின்றனர்.

அடிப்படை உரிமையையே அசைக்கும் அத்துமீறல்

*  1985-86ம் ஆண்டில் முல்லைப்பெரியாறு அணை பகுதியில் வயர்லெஸ் கருவியை பொருத்தி, அணையை கண்காணித்தது. எதிர்ப்பு கிளம்பியதும் மாற்றாக கேரளா புதிய நீர்மட்ட அளவுகோலை வைத்தது. இதற்கும் விவசாயிகளால் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டு அது அகற்றப்பட்டது. 

*  தேக்கடியில் உள்ள தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள், ஊழியர்கள் வீடுகளை விட்டு மாலை 6 மணியில் இருந்து மறுநாள் காலை 9 மணி வரை யாரும் வெளியே வரக்கூடாது  என்று கேரள வனத்துறை ஐஎப்எஸ் அதிகாரி கோபாலகிருஷ்ணன்  உத்தரவிட்டார்.  எதிர்ப்பு கிளம்பியதும் அதுவும்  வாபஸ் பெறப்பட்டது. 

*  அதேபோல் படகுதுறையிலும் நீர்மட்ட அளவு கோல் வைக்கப்பட்டது. அதற்கும் தமிழக விவசாயிகள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

*  தமிழகத்துக்கு தண்ணீர் வரும் அணையின் ஷட்டரை உடைத்து தண்ணீரை நிறுத்த கேரள அரசியல்வாதிகள் முயற்சி செய்தனர். அப்போது தான் தமிழகமே கொதித்து எழுந்தது. இதையடுத்து, கேரளா பின்வாங்கியது.   

இப்போது, அணையின் தண்ணீர் அளவை கண்காணித்து உடனுக்குடன் தகவல் தெரிவிக்கும் கருவியை நிறுவ மத்திய அரசின் அனுமதியுடன் கேரளா முயற்சித்தது.  அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.

*  தமிழகத்துக்கு தண்ணீர் தருவதை இதுவரையில் கேரளா எதிர்க்கவில்லை. அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது என்றுதான் கூறி வந்தது. ஆனால், இப்போது தண்ணீரின் அளவை கண்காணிக்க கருவி வைக்க முயற்சி செய்வதன் மூலம் அணை தண்ணீரில் தமிழகத்துக்கு உள்ள சட்டப்பூர்வ, அனுபவ, அடிப்படை உரிமையை அசைத்து பார்க்கும் அத்துமீறலில் இறங்கி இருக்கிறது தெளிவாகிறது.

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452