Published On: Tuesday, March 06, 2012
புடின் பெற்றது திணிக்கப்பட்ட வெற்றி

ரஷ்ய அதிபர் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. அதில் பதிவான ஓட்டு எண்ணிக்கை முடிவில் பிரதமர் விளாடிமிர் புடின் 63 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து, அவர் 3வது முறையாக ரஷ்ய அதிபராகிறார். கடந்த டிசம்பரில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சொற்ப ஓட்டுகள் வித்தியாசத்தில் புடின் கட்சி வெற்றி பெற்றது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. தேர்தல் முறைகேடுகள் மூலம் வெற்றி பறிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. புடினுக்கு எதிராக மாஸ்கோவில் பிரம்மாண்ட பேரணிகள் நடத்தப்பட்டன.
இந்த சூழ்நிலையில், அதிபர் தேர்தலை உன்னிப்பாக கவனிக்க ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமைப்பின் சார்பில் சர்வதேச பார்வையாளர்கள் ரஷ்யா வந்திருந்தனர். அதிபர் தேர்தலை அவர்கள் கண்காணித்தனர். புடினுக்கு எதிராக அதிபர் தேர்தலில் போட்டியிட மிகைல் கோடர்காவ்ஸ்கி என்பவர் திட்டமிட்டிருந்தார். முன்னாள் எண்ணெய் வர்த்தக தொழிலதிபரான அவருக்கு ரஷ்யாவில் கடந்த சில ஆண்டுகளாக செல்வாக்கு அதிகரித்து வந்தது. பல்வேறு குற்றச்சாட்டுகள் அடிப்படையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அரசியல் கைதியான அவரது தண்டனையை மறுபரிசீலனை செய்வதாக தேர்தலுக்கு முன் அதிபர் மெத்ததேவ் உறுதி அளித்திருந்தார். எனவே, மிகைல் வெளியே வந்து போட்டியிடுவார் என்ற நம்பிக்கையில் விடுதலை கட்சியினர் புடினுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தவில்லை. ஆனால், தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகும் மிகைலை ரஷ்ய அரசு விடுதலை செய்யவில்லை.
எனவே, எதிர்த்து போட்டியிட வலுவான தலைவர் இல்லாத நிலையில் புடினின் வெற்றி எளிதானதாக சர்வதேச பார்வையாளர்கள் புகார் கூறியுள்ளனர். இது மக்கள் மீது திணிக்கப்பட்ட வெற்றி என்று அவர்கள் வர்ணித்துள்ளனர். இதையடுத்து, ரஷ்யாவில் எதிர்க்கட்சிகள், புடின் எதிர்ப்பாளர்கள் மீண்டும் போராட்டத்தில் குதிக்கலாம் என்ற சூழ்நிலை நிலவுகிறது.