Published On: Thursday, March 01, 2012
மனித உரிமைக் கூட்டத்தில் இலங்கையை ஆதரிக்க கூடாது - கருணாநிதி, பழ.நெடுமாறன்

(இந்தியாவிலிருந்து சாஹுல் ஹமீது)
இலங்கை மீது போர்க்குற்ற விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்ற தீர்மானத்தின் மீது ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் நடைபெறும் வாக்கெடுப்பில் இலங்கை அரசை இந்தியா ஆதரிக்கக்கூடாது என தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை இனியும் அனுமதிக்கக்கூடாது எனும் நோக்கில், இலங்கை மீது போர்க்குற்ற விசாரணைக்கு ஆணையிட வேண்டுமென்று வலியுறுத்திடும் தீர்மானம் ஒன்றை கடந்த திங்கட்கிழமை தொடங்கிய ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் அமெரிக்கா, நார்வே, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கொண்டு வந்துள்ளன.
இந்த தீர்மானத்தின்மீது நடைபெறவிருக்கும் வாக்கெடுப்பில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என்று இலங்கை அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி நடைபெற்ற கழக உயர்நிலை செயல்திட்டக்குழுவில் விவாதிக்கப்பட்டது.
அந்த கூட்டத்தில் முதல் தீர்மானமாக, இலங்கை போர் குற்றங்கள் பற்றி ஐ.நா. குழு பரிந்துரைத்துள்ளவாறு சர்வதேச விசாரணை ஆணையத்தை அமைத்து விசாரணை நடத்தவேண்டும் என்றும், போர் என்றால் பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்படுவது சகஜம்தான் என்று இதயமற்றோர் பாணியில் விமர்சனம் செய்யாமல், இந்தக் குற்றங்களுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு வேண்டிய அனைத்து முயற்சிகளிலும் இந்திய அரசு உடனடியாக ஈடுபட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் இந்த நிலைப்பாட்டினை மத்திய அரசுக்கு மீண்டும் நினைவுபடுத்துவதோடு, ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும் போது, எக்காரணம் கொண்டும் இந்திய அரசு இலங்கை அரசை ஆதரிக்கக்கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன் என்று கருணாநிதி அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐ.நா. மனித உரிமைக் குழு கூட்டத்தில் இலங்கைக்கு இந்தியா அளித்தால் அது கண்டனத்துக்குரியது என பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ஐ.நா. மனித உரிமை குழுக் கூட்டத்தில் போரின்போது இலங்கை இராணுவம் மனித உரிமை மீறலில் ஈடுபட்டது தொடர்பாக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வருகிறது.
இதை எதிர்த்தும், இலங்கைக்கு ஆதரவாகவும் இந்தியா வாக்களிக்கும் என வெளிப்படையாக இந்தியா தங்களிடம் தெரிவித்து விட்டதாகவும் இந்தியாவின் ஆதரவு என்பது நூற்றுக்கு நூறு சதவீதம் உறுதியானது எனவும் இலங்கையின் மனித உரிமைக்கான சிறப்பு தூதர் மகிந்த சமரசிங்கே தெரிவித்தார்.
இதைக்கண்டு உலகம் எங்கும் உள்ள தமிழர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் அதிர்ச்சி அடைந்தனர். மனித நேயமற்ற முறையில் இந்திய அரசு நடந்து கொள்வதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு நெடுமாறன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.