Published On: Friday, March 02, 2012
அமெரிக்கா இலங்கையின் எதிரியல்ல - அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா

அமெரிக்கா இலங்கையின் எதிரியல்ல. ஜெனிவாவில் என்ன நடந்தாலும், இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவுகள் தொடரும். இருப்பினும், நாம் இப்போது இறுக்கமானதொரு நேரத்தில் இருக்கிறோம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், நல்ல உறவுகள் தொடரும் என்று நம்புகிறோம். இவ்வாறு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புட்டீனிஸ் தெரிவித்துள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழு இலங்கை அரசு நியமித்த குழு. அதன் பரிந்துரைகளை சில மிகச்சிறந்தவை. பொறுப்புக்கூறுதலில் அது ஏமாற்றத்தைத் தந்துள்ளது என்பதை நான் கூறவேண்டும். இந்த நாட்டில் உள்ள சிலர் அதற்குப் பதிலளிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனாலும், இது நல்ல அறிக்கை தான். இதுகுறித்த நடவடிக்கைத் திட்டம் எங்கே என்பதை நாம் தெரிந்து கொள்ள விரும்புகிறோம். இந்தப் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்ட அரசு, எதற்காக அதனை செய்ய முடியாது என்று நினைக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை அரசின் ஆதரவில் இடம்பெற்ற அமெரிக்க எதிர்ப்புப் பேரணிகள் குறித்து கவலை வெளியிட்டுள்ள அவர், ஜெனிவாவில் கொண்டுவரப்படவுள்ள தீர்மானமானது இலங்கைக்கு எதிரான ஒரு சதி அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
இதன் அர்த்தம் சதி அல்ல. இலங்கை அரசு சில நடவடிக்கைகளை எடுக்கிறது. ஆனால் எல்லா விவகாரங்களிலும் அல்ல. அரசு நடத்திய பேரணிகள் மக்கள் கருத்தாகமாட்டா. அனைத்துலக அமைப்பு ஒன்றில், இது தான் எமது திட்டம். இதைச் செய்வதற்கு கடமைப்பட்டுள்ளோம் என்று இலங்கையை விளக்கமளிக்குமாறு கேட்பதற்கு இதுதான் சரியான நேரம் என நான் நினைக்கிறேன், அதைத்தான் நாம் கேட்கிறோம்.
ஜெனிவா தீர்மானத்துக்கு எதிராக இலங்கை அரசின் ஆதரவில் நடத்தப்பட்ட பேரணிகளை, மனிதஉரிமை விவகாரங்களுக்கு எதிரான இலங்கை மக்களின் கருத்தாக நான் எடுத்துக் கொள்ளவில்லை. அமெரிக்க அரசு இலங்கையை அச்சுறுத்தப் போவதும் இல்லை. காலக்கெடு விதிக்கப் போவதும் இல்லை. ஆனால், போருக்குப் பிந்திய விவகாரங்கள் தொடர்பாக அனைத்துலக சமூகத்தின் முன் இலங்கை தமது கடமைகளை மேற்கொள்வதற்கான அழுத்தத்தை கொடுப்பதாக இது இருக்கும் என்று நம்பப்படுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

