Published On: Friday, March 02, 2012
வடக்கின் உண்மை நிலையை தெளிவுபடுத்தும் தொகை மதீப்பீட்டு அறிக்கை

இறுதிக் கட்ட யுத்தத்தின்போது 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலான உண்மை நிலைமையை தெளிவுபடுத்துவதற்காக வடக்கில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய தொகை மதிப்பீட்டு அறிக்கையை ஜெனீவாவில் அங்கத்துவ நாடுகளிடையே பகிர்ந்தளித்து அறிவூட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம் என பதில் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
அங்கத்துவ நாடுகளில் மனமாற்றம் ஏற்பட்டு அவை இலங்கைக்கு ஆதரவாக வெளிப்படையாக கருத்துக் கூறி வருவதாக கூறிய அவர், இலங்கையில் மனித உரிமை மீறல், ஆட்கடத்தல் போன்ற நிலைமை கிடையாது என பிரித்தானியா நற்சான்றிதழ் வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது என்று குறிப்பிட்டார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது;
இலங்கை தொடர்பான தவறான குற்றச்சாட்டுகள், தெளிவின்மை என்பவற்றுக்கு தனித்தனியாகவும் கூட்டாகவும் எமது தூதுக்குழு அறிவூட்டி வருகிறது. வடக்கு, கிழக்கின் தற்போதைய நிலைமை தொடர்பில் அங்கு சுயாதீனமாக தகவல்கள் திரட்டப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டது.
1981இன் பின் நடந்த இந்த புள்ளி விபரங்களின் மூலம் காணாமல் போனதாகவும் கொல்லப்பட்டதாகவும் கடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் வழங்கப்பட்டுள்ளது. 40 ஆயிரம் பேர் இறுதிக் கட்ட யுத்தத்தில் இறந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டாலும் 2009 ஜனவரி முதல் மே மாதம் வரை சுகவீனம், முதுமை உட்பட பல்வேறு காரணங்களினால் 8998 பேரே இறந்துள்ளனர். இப்பகுதியில் 90 சதவீதத்திற்கு மேல் கல்வி நடவடிக்கை நடைபெறுகிறது. 481 குடும்பங்கள் மட்டுமே மீள்குடியேற்றப்பட வேண்டியுள்ளது. இந்த விடயங்கள் குறித்து ஜெனீவாவில் ஏனைய நாடுகளை அறிவூட்டி வருகிறோம்.
52 இலங்கையரை நாடு கடத்த எடுத்த நடவடிக்கையினூடாக பிரித்தானியா சிறந்த செய்தியொன்றை கூறியுள்ளது. இலங்கையில் சுமுகமான சூழ்நிலை உள்ளதால் இலங்கைக்குத் திரும்ப அங்குள்ள இலங்கையருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக நீதிமன்றம் சென்றவர்களில் 52 பேரே இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இலங்கை மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை பிரித்தானியா மறுத்திருப்பது தற்போதைய சூழ்நிலையில் இலங்கைக்கு கிடைத்த சிறந்த நற்சான்றிதழாகும்.
இதுதவிர அவுஸ்திரேலிய எம்.பி.க்களும் இலங்கைக்கு ஆதரவாக கருத்துக் கூறியுள்ளனர். அவுஸ்திரேலிய, இலங்கை பாராளுமன்ற குழு கூட்டத்தில் வடக்கின் உண்மை நிலை குறித்து விளக்கப்பட்டது. வட பகுதிக்கு நேரில் வந்து உண்மை நிலைமைகளை அறிந்த கிரிஸ் ஹெயாஸ் வடக்கு நிலைமை குறித்து பாராட்டிப் பேசியுள்ளார். ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவர உள்ள பிரேரணையை தோற்கடிக்க நாம் முழு முயற்சி செய்து வருகிறோம். அணிசேரா நாடுகள் உட்பட பல நாடுகள் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது குறித்து சர்வதேச சமூகம் எமக்கு அழுத்தம் தர தேவையில்லை. நாம் அதிலுள்ள சிபார்சுகளை அமுல்படுத்தி வருகிறோம். நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பினூடாக அதனை செயற்படுத்த ஆவன செய்துவரும் அதேவேளை தேவை ஏற்படின் பாராளுமன்றத்திற்கும் எடுத்துச் செல்வோம். இதற்கு கால அவகாசம் தேவை.
நாட்டு மக்கள் அரசை மாற்றக் கோரவில்லை. இங்கு உள்ளக பிரச்சினை கிடையாது. எனவே, அரசை கவிழ்க்க மேலைத்தேய நாடுகளுக்கு இடமளிக்க முடியாது. நாட்டிற்காக மக்கள் ஒன்றுபட்டுள்ளனர். செனல்-4 அலைவரிசை மற்றொரு வீடியோவை வெளியீட்டாலும் அதனால் எமக்கு பாதிப்பு ஏற்படாது. அந்த நிறுவனம் போலியான வீடியோக்களையே வெளியிடுகிறது என்பதை நிரூபித்துள்ளதால் அதன் நம்பகத்தன்மை குறைந்துள்ளது. ஜெனீவாவில் எமக்கு வெற்றி கிடைக்கும் என நம்புகிறோம் என்றார்.
ஐ.நா. மனித உரிமைப் பேரவை மாநாட்டின் ஆரம்ப அமர்வுகள் கடந்த மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகி நேற்றுடன் நிறைவடைந்தன. இங்கு உரையாற்ற பல நாடுகளுக்கு அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. கியூபா மற்றும் கிர்கிஸ்தான் வெளிவிவகார அமைச்சர்களும் ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சரும் மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் இலங்கைக்கு ஆதரவாக உரையாற்றினர்.
இதேவேளை நேற்று முன்தினம் அணிசேரா நாடுகளின் கூட்டமொன்று எகிப்தின் தலைமையில் இடம்பெற்றது. இங்கு இலங்கைத் தூதுக்குழுவின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து விளக்கினர். அமெரிக்காவின் முயற்சியை அணிசேரா நாடுகள் தோற்கடிக்க வேண்டும் என இங்கு கியூபா யோசனையொன்றை முன்வைத்தது. இதனை ஈக்குவடோர் ஆமோதித்தது. மேற்படி தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாகவும் பிரதி அமைச்சர் கூறினார். இது தொடர்பில் அணி சேரா நாடுகளின் அமைப்பு நேற்று அறிக்கையொன்றை வெளியிட திட்டமிட்டிருந்தது.
மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளையும் ஏனைய நாடுகளையும் அறிவூட்டும் கூட்டத்தின் போது புகைப்படங்கள், வீடியோக்கள் என்பவற்றை காட்சிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. நாடுகளுக்கு தமது சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை செயற்படுத்த கால அவகாசம் தேவை எனவும் அதனை அமுல்படுத்த 6 அமைச்சர்கள் கொண்ட குழுவை ஜனாதிபதி நியமித்துள்ளார் எனவும் சக நாடுகளுக்கு இலங்கை அறிவூட்டியது. இலங்கைக்குழு இன்று நாடு திரும்ப உள்ளதோடு இம்மாத நடுப்பகுதியில் அது மீண்டும் ஜெனீவா செல்ல உள்ளது.

