Published On: Friday, March 09, 2012
மகளுடன் சேர்ந்து பிளஸ் - 2 பரீட்சை எழுதும் தந்தை
(இந்தியாவிலிருந்து சாஹுல் ஹமீது)
பிளஸ் 2 பொதுத்தேர்வை மகளுடன் சேர்ந்து தந்தையும் எழுதுகிறார். 2 ஆண்டுகளுக்கு முன் இதேபோல் 10ஆம் வகுப்பு தேர்வை எழுதினார். நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த வேட்டங்குடியை சேர்ந்தவர் குஞ்சு மகன் மாரிமுத்து (வயது 39). சாலை பணியாளர். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 36). இவர்களுக்கு கடந்த 1994ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன், 2 மகள் உள்ளனர்.

இவர்களது மூத்த மகள் சுபஸ்ரீதேவி (வயது 17), சீர்காழியில் உள்ள சியாமளா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். நேற்று பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது. சுபஸ்ரீதேவியின் தந்தை மாரிமுத்துவும் தனித்தேர்வராக நேற்று பிளஸ் 2 தேர்வு எழுதினார். இவர் வரலாறு பிரிவு பாடத்தை எடுத்துள்ளார். தேர்வுக்காக மகளுடன் சேர்ந்து, கடந்த சில நாட்களாக தீவிரமாக படித்து வந்தார். நேற்று தேர்வு எழுதுவதற்காக உற்சாகமாக சென்ற மாரிமுத்து கூறியதாவது;
நான் கடந்த 1997இல் சாலை பணியாளராக பணியில் சேர்ந்தேன். பதவி உயர்வுக்காக படித்து வருகிறேன். மகளுடன் சேர்ந்து 2010ல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினேன். சுபஸ்ரீதேவி 447 மதிப்பெண் பெற்றார். நான் ஒரு பாடத்தில் தோல்வியடைந்து, அடுத்தமுறை எழுதி தேர்ச்சி பெற்றேன். இப்போது பிளஸ் 2 பொதுத்தேர்வையும் மகளுடன் எழுதுவது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால், 10ஆம் வகுப்பில் தோல்வியடைந்தது போல் இருக்காது. முழு முயற்சியுடன் படித்துள்ளேன். அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. படிப்புக்கு வயது தடையல்ல. தேர்வுக்கு படிப்பதற்கு என் மனைவி மகேஸ்வரி மிகுந்த ஊக்கமளித்தார்.
பிளஸ் 2 முடித்தபின், பட்டப்படிப்பை படித்து, பதவி உயர்வையும் பெறுவேன். இவ்வாறு மாரிமுத்து நம்பிக்கையுடன் கூறினார். அதன்பின் மகளுக்கு வாழ்த்து தெரிவித்து, அவரை சீர்காழி பள்ளி தேர்வு மையத்தில் விட்டுவிட்டு, தனது தேர்வு மையம் உள்ள மயிலாடுதுறை செயின்ட் பால்ஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு மாரிமுத்து புறப்பட்டு சென்றார்.