Published On: Tuesday, March 06, 2012
அவுஸ்திரேலியாவின் வெற்றி தொடருமா? இலங்கையுடன் மோதல்

முத்தரப்பு தொடரின் இரண்டாவது பைனலில் இன்று இலங்கை, ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. முதல் பைனலில் வென்ற ஆஸ்திரேலியா மீண்டும் வெற்றி பெற்று, கோப்பை கைப்பற்ற தயாராக உள்ளது. இலங்கை அணியும் பதிலடி கொடுக்க காத்திருப்பதால், பரபரப்பான போட்டியை எதிர்பார்க்கலாம்.
இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் பங்கேற்ற முத்தரப்பு ஒருநாள் தொடர் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. லீக் போட்டிகளில் ஏமாற்றிய இந்திய அணி, தொடரில் இருந்து வெளியேறியது.
மூன்று பைனல்கள் கொண்ட முதல் போட்டியில், வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலையில் உள்ளது. இரண்டாவது பைனல் இன்று அடிலெய்டில் நடக்கிறது.
வார்னர் சந்தேகம்:
ஆஸ்திரேலிய அணியின் "பேட்டிங்' வலுவாக உள்ளது. முதல் பைனலில் 163 ரன்கள் விளாசிய வார்னருக்கு தொடைப் பகுதியில் பிடிப்பு ஏற்பட்டுள்ளது, பின்னடைவான விஷயம். இவர் இடம் பெறுவதே சந்தேகமே. இதனால் வாட்சனுடன் இணைந்து மாத்யூ வேட் துவக்கம் தர வேண்டிய நிலை உள்ளது. பாரஸ்ட்டுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கலாம்.
பின்வரிசையில் கிறிஸ்டியன், டேவிட் மற்றும் மைக்கேல் ஹசி சகோதரர்களால், இலங்கை அணிக்கு தொல்லை ஏற்படலாம். கேப்டன் மைக்கேல் கிளார்க் வருகை அணிக்கு கூடுதல் உற்சாகம் தான்.
டேவிட் அபாரம்:
பந்து வீச்சில் எதிர்பார்த்தது போலவே பிரட் லீ, பிரகாசிக்க துவங்கிவிட்டார். அதேநேரம், டெஸ்ட் தொடரில் இந்தியாவை புரட்டி எடுத்த பட்டின்சன், ஹில்பெனாஸ் இருவரும் ஒருநாள் போட்டிகளில் ஏமாற்றுவது பலவீனம் தான். இதனால் இந்த இருவரில் ஒருவர் மெக்கேவுக்கு வழிவிடலாம். சுழலில் தோகர்டி விக்கெட் வீழ்த்தவில்லை என்றாலு<ம், இலங்கை அணிக்கு நெருக்கடி கொடுத்தார். டேவிட் ஹசி அணிக்கு தேவையான நேரங்களில் எல்லாம் விக்கெட்டுகளை சாய்ப்பது ஆஸ்திரேலியாவுக்கு பெரும் பலம்.
எதிர்பாராத போராட்டம்:
முதல் பைனலில், இலங்கை அணி கடும் போராட்டத்தை வெளிப்படுத்தியது. இது இன்றும் தொடரலாம். கேப்டன் ஜெயவர்தனா, தில்ஷன் ஜோடி நல்ல துவக்கம் தரவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். சங்ககரா, சண்டிமால், திரிமான்னே போராட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.
கடந்த போட்டியில் கடைசி கட்டத்தில் அதிரடிய காட்டிய குலசேகரா, தரங்கா இருப்பதால், "பேட்டிங் ஆர்டர்' நீள்கிறது. "ஆல்-ரவுண்டர்' மாத்யூஸ் இன்று அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"மழுங்கிய' மலிங்கா:
இலங்கை அணியின் நட்சத்திர பவுலரான மலிங்காவின் வேகப்பந்து வீச்சு, பிரிஸ்பேனில் எடுபடாமல் போனது துரதிருஷ்டம் தான். கடந்த மூன்று போட்டிகளில் 96, 74 ரன்கள் விட்டுக்கொடுத்த இவர், இன்று சிறப்பாக செயல்படும் பட்சத்தில் கோப்பை வாய்ப்பை தக்க வைக்கலாம். இவருக்கு குலசேகரா கைகொடுக்க காத்திருக்கிறார். "சுழலில்' ஹெராத் மட்டும் தான் இடம் பெறுவார் எனத் தெரிகிறது.
வெற்றி எந்தப்பக்கம்:
கடந்த 2006ல் நடந்த முத்தரப்பு தொடர் பைனலில், இங்கு இலங்கை அணி ஆஸ்திரேலியாவை வென்றது. இம்முறை முதல் பைனலில் தோற்றாலும், கடைசிவரை நெருக்கடி கொடுத்தனர். இன்றும், இலங்கை வீரர்கள் ஆக்ரோஷமாக போராடலாம். சொந்த மண்ணில் விளையாடுவது, ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமாக உள்ளது.
மழை வருமா
போட்டி நடக்கும் அடிலெய்டில் வெப்பநிலை அதிகபட்சம் 24, குறைந்த பட்சம் 15 டிகிரி செல்சியசாக இருக்கும். வானம் மேகமூட்டமாக இருந்தாலும் மழை வர வாய்ப்பில்லை.
தோல்வி அதிகம்
அடிலெய்டு மைதானத்தில் இலங்கை அணி பங்கேற்ற 16 போட்டிகளில், 3ல் மட்டும் தான் வென்றுள்ளது. இந்தியாவுக்கு எதிராக இத்தொடரில் இங்கு பங்கேற்ற, கடைசி போட்டி "டை' ஆனது.
* ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கு விளையாடிய 7 போட்டிகளில், இலங்கை அணி 6ல் தோல்வி, ஒரு வெற்றி பெற்றது.
* ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரையில் கடைசியாக இங்கு பங்கேற்ற 9 போட்டிகளில் 6ல் வென்று, தனது ஆதிக்கத்தை நிரூபித்தது.
* ஆஸ்திரேலிய அணி, இலங்கைக்கு எதிராக அதிகபட்சமாக 323/2 (1985) ரன்கள் எடுத்துள்ளது.
* இலங்கை அணி அதிகபட்சமாக 274/8 ரன்கள் (2006, எதிர்-ஆஸ்திரேலியா) எடுத்தது.
வெற்றி, வெற்றி தான்: கிளார்க்
இரண்டாவது பைனல் குறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறுகையில்,"" போட்டிகளில் எப்படி வென்றாலும், அது வெற்றி தான். இந்த போட்டியில் "பவர்பிளே' மற்றும் கடைசி கட்ட ஓவர்களில் சற்று கவனம் எடுத்து வீச வேண்டும். ஒருநாள் அணிகள் தரவரிசையில் நாங்கள் தான் "நம்பர்-1' இடத்தில் உள்ளோம். இதற்கேற்ப திறமை வெளிப்படுத்த முயற்சிப்போம்,'' என்றார்.
போராட்டம் தொடரும்: ஜெயவர்தனா
இன்றைய போட்டி குறித்து இலங்கை அணி கேப்டன் ஜெயவர்தனா கூறுகையில்,"" முதல் பைனலின் கடைசி நேரத்தில் எங்களது வீரர்கள் போராட்ட குணத்தை வெளிப்படுத்தினர். இன்றைய போட்டியிலும் கடைசிவரை வெற்றிக்கு போராடுவோம்,'' என்றார்.