Published On: Tuesday, March 06, 2012
இலங்கைக்கு ஆதரவாக 'கிழக்கு ஐக்கிய மக்கள் பேரவை' அழைப்பு

(தென்கிழக்கு செய்தியாளர்)
இலங்கைக்கு எதிராக உலகளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சதிவலையின் ஒரு அங்கமாகக் கருதப்படுகின்ற ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான வாதங்களை முன்வைத்து தீர்மானம் நிறைவேற்றப்படுகின்ற இச்சந்தர்ப்பத்தில் முழுமையாகப் பாதிக்கப்படப் போகின்றவர்கள் இலங்கை மாதாவின் பிள்ளைகளாகிய நாமே. நாட்டில் யுத்தத்ததை முழுமையாக ஒழித்ததை தாங்கொண்ணாத மேற்குலகம் இலங்கைக்கு எதிரான வாதங்களை முன்வைத்திருக்கின்ற நிலையில் இலங்கை மக்கள் அணிதிரளும் பேரணியில் குறிப்பாக கிழக்கு வாழ் முஸ்லிம்கள் அணிதிரளும் மக்களுடன் கைகோர்க்குமாறு கிழக்கு ஐக்கிய மக்கள் பேரவையின் தலைவரான எம்.ஜே. முஹம்மத் அன்வர் நௌஸாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேற்கத்தேயமும் அதன் நட்புகளும் உலகப் பயங்கரவாதம் என்ற போர்வையில் தமது சுரண்டல்களையும் கலாசார பதிப்புக்களையும் தொடர்கின்ற வேளையில் தமது பட்டியலில் இலங்கைத் திருநாட்டினையும் சேர்த்து எம்மீது இன்னுமொருமுறை திட்டமிடப்பட்ட முறையில் தங்கள் தாக்குதல்களை நடாத்துவதற்கான சதித்திட்டங்களை எம்மவர்களையம் தங்கள் சார்பு கூலி அமைப்புக்களையும் கொண்டு நடாத்துவதற்கு ஏற்பாடு செய்த நாடகத்தினை அரங்கேற்ற தயாராகின்ற தினமாகவும் தருணமாகவும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் ஜெனீவா மாநாட்டினை பயன்படுத்தவுள்ளனர்.
இந்நிலையில் இலங்கை வாழ் மக்களாகிய நாம் அனைவரும் எங்கள் கடமைகளை உணர்ந்து செயற்பட வேண்டிய கட்டாயமானதும், அவசியமானதுமாகும். கட்சி பேதம், இன வேறுபாடு, மொழி பேதம் மறந்து எம் நாட்டுக்காக நாம் செயற்பட வேண்டிய தருணமாகவே இதனை நாம் இனங்காண்கிறோம். விஷேடமாக இலங்கை முஸ்லிம்கள் தம்மை உணர்ந்து, செயலில் இறங்க வேண்டிய கட்டாயத்திலுள்ளோம். ஏனெனில், எம் நாட்டின் வரலாற்றில் நாம் எமது தேசியத்திற்காக அதிகமதிகமான தியாகங்களை செய்து வந்துள்ளோம்.
அந்த வகையில் இந்த இக்கட்டான சூழலில் இருந்து விடுபட நாம் செயற்பட வேண்டியுள்ளது. அதற்காக நாம் அகிம்சை வழியிலான போராட்டங்களை முன்னெடுக்கவும் தயங்கக் கூடாது. முஸ்லிம்களாகிய நாம் எமது தேசத்தின் நல்லெதிர்காலத்திற்காக எமது ஏக இறைவனை பிரார்த்திப்பதுடன் விஷேட பிரார்த்தனைகளை பள்ளிவாசல்கள் தோறும் செய்வதுடன் எல்லா நாடுகளிலும் உள்ள உறவுகளையும் எமது நாட்டுக்காக செயற்படும் நிகழ்ச்சித்திட்டங்களிலும் பங்கெடுப்பதற்கான அவசியத்தை விளக்குமாறு வேண்டிக் கொள்வதுடன் குறித்த தினத்தில் எமது நாட்டின் எல்லா மூலைமுடுக்குகளிலும் இடம்பெற இருக்கின்ற அந்நிய சக்திகளுக் கெதிரான போரட்ட நிகழ்வுகளில் உண்மையான தேசிய உணர்வுகளுடன் பங்கு கொள்ளுமாறு அழைப்புவிடுப்பதில் நாம் பெருமிதம் அடைகின்றோம்.
- கிழக்கு ஐக்கிய மக்கள் பேரவை