Published On: Thursday, March 01, 2012
BPL T2O 'தாக்கா கிளேடியேட்டர்ஸ்' அணி சாம்பியன்

வங்கதேச பிரிமியர் லீக் டி20 தொடரில், மோர்டசா தலைமையிலான தாக்கா கிளேடியேட்டர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
மிர்பூர் தேசிய மைதானத்தில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் பாரிசால் பர்னர்ஸ் அணியுடன் கிளேடியேட்டர்ஸ் மோதியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கிளேடியேட்டர்ஸ் களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன் பின் துடுப்பெடுத்தாடிய பாரிசால் பர்னர்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 140 ஓட்டங்கள் எடுத்தது.
அகமது ஷெசாத் 28, மொமினுல் ஹக், பர்கத் உசேன் தலா 11 ஓட்டங்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். அதிரடியாக விளையாடிய தொடக்க வீரர் கேப்டன் பிராட் ஹாட்ஜ் 70 ஓட்டங்கள்(51 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.
கிளேடியேட்டர்ஸ் பந்துவீச்சில் ஷாகித் அப்ரிடி 3, நவேத் உல் ஹசன் 2, சயீத் அஜ்மல் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து களமிறங்கிய கிளேடியேட்டர்ஸ் 15.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 144 ஓட்டங்கள் எடுத்து கிண்ணத்தை தட்டிச் சென்றது. இம்ரான் நசீர் 75 ஓட்டங்கள்(43 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்), நஜிமுதீன் 13 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். அனாமுல் ஹக் 49 ஓட்டங்கள்(38 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்), அசார் முகமது(0) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.