Published On: Friday, March 02, 2012
திருநங்கைளுக்காக இந்திய பாலியல் சுதந்திர கட்சி

(இந்தியாவிலிருந்து சாஹுல் ஹமீது)
திருநங்கைகளின் உரிமைகளுக்கு குரல் கொடுக்க “இந்திய பாலியல் சுதந்திர கட்சி” விரைவில் தொடங்கப்படும் என திருநங்கை ரோஸ் வெங்கடேசன் கூறினார். கும்பகோணம் ரோட்டரி சங்கம் சார்பில் டிரான்ஸ் மீடியா நிறுவனரும், தனியார் டி.வி.யில் பல்வேறு நிகழ்ச்சிகளில் நடித்த திருநங்கை ரோஸ் வெங்கடேசனுக்கு, சிறந்த முன்னுதாரண விருது வழங்கும் விழா கும்பகோணத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள வந்த ரோஸ் வெங்கடேசன் நிருபர்களிடம் கூறியதாவது,
பாலியல் சிறுபான்மையினருக்கு சமுதாயத்தில் பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. அவர்கள் புறக்கணிக்கப்பட்டு மற்றவர்களால் கேலி, கிண்டலுக்கு உள்ளாகி, போக பொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றனர். தொன்றுதொட்டு அவர்கள் புறக்கணிக்கப்படுவதால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கின்றனர். அவர்களுக்கு வேலை வாய்ப்பும் இல்லை. உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. இந்தநிலை மாறவேண்டும்.
அவர்களுக்கு பொருளாதாரரீதியில் முன்னேற்றம் இல்லாததே அவர்கள் சில செயல்களில் ஈடுபட நேரிடுகிறது. அதற்கு காரணம் இயற்கைதான். மக்கள் பிரதிநிதியாக வெற்றி பெற்று அரசியலில் திருநங்கைகளின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பேன். சட்டமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட ஒரு பெரிய மாநில கட்சியிடம் வாய்ப்பு கேட்டேன். ஆனால் கிடைக்கவில்லை. எனவே விரைவில் புதிய கட்சி தொடங்க உள்ளேன். “இந்திய பாலியல் சுதந்திர கட்சி” என்ற பெயரில் இக்கட்சி செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.