Published On: Saturday, March 03, 2012
இது சி.ஐ.ஏ.யின் போலியான கடிதம் - தலிபான் அறிக்கை

ஆப்கானிஸ்தானில் சமீப காலமாக பரபரப்பாக உலாவத் தொடங்கியுள்ள ‘விவகாரமான’ ஒரு கடிதம், “சி.ஐ.ஏ.யின் விஷமத்தனமான தயாரிப்பு” என்று அறிவித்துள்ளது ஆப்கான் தலிபான் அமைப்பு. ‘விவகாரம்’ என்னவென்றால், பரபரப்பாக உலாவிக் கொண்டிருக்கும் கடிதம், தலிபான் தலைவர் முல்லா ஓமர் எழுதியதுபோல, அவரது கையொப்பத்துடன் உலாவிக் கொண்டிருக்கிறது. தமது இயக்கத்தின் போராளிகள் அனைவரும், தாக்குதல்களை உடனடியாக நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று தலிபான் போராளிகளுக்கு, இயக்கத் தலைவர் முல்லா ஓமர் பெயரில் எழுதப்பட்டுள்ள கடிதம் இது.
இந்த கடிதத்தின் பிரதிகள் கடந்த 3 தினங்களாக ஆப்கானின் பல பகுதிகளிலும் உலாவிக் கொண்டுள்ளன. அதைடுத்து பல குழப்பங்களும் ஏற்பட்டுள்ளன. கணிசமானவர்கள், அதில் இருப்பது முல்லா ஓமரின் கையொப்பம்தான் என்றும் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள். இதனால், தலிபான் இயக்கம் தமது போராளிகளுக்கே பதில் சொல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கடிதம் வெளியாகி 3 தினங்களின்பின் வெள்ளிக்கிழமை தலிபானின் மறுப்பு அறிக்கை, அவர்களது அதிகாரபூர்வ இணையத்தளம் ‘வாய்ஸ் ஆஃப் ஜிகாத்’தில் வெளியாகியுள்ளது. வழமையான அவர்களது அறிக்கைபோல அல்லாது, இந்த அறிக்கை பிற மொழிகளுடன் ஆங்கிலத்திலும் வெளியாகியுள்ளது.
“எதிரியின் (அமெரிக்கா) உளவுத்துறை சதிசெய்து, எமது தலைவரின் பெயரில் போலியாக தயாரித்துள்ள ஒரு கடிதம், எமது போராளிகளை குழப்பத்தில் ஆழ்த்துவதற்காக வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கடிதம் மக்கள் மத்தியில் திட்டமிட்டு உலாவ விடப்பட்டுள்ளது. அத்துடன் கவர்களில் வைக்கப்பட்டு, அமெரிக்க அடிவருடிகளால் (ஆப்கான் அரசை சொல்கிறார்கள்) காபுல் நகரிலுள்ள ஊடகங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கடிதம் எமது தலைவர் முல்லா ஓமரால் எழுதப்பட்டது அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என்கிறது தலிபான் அறிக்கை.
“சி.ஐ.ஏ.க்கும் நேட்டோ படைகளுக்கும் ஆப்கானிஸ்தானில் தோல்வி முகம் தெரியத் தொடங்கியிருப்பதால் ஏற்பட்ட பதட்டத்தில், இப்படியான போலி லெட்டர் ஒன்றை சி.ஐ.ஏ. வெளியிட்டுள்ளது” என்பது தலிபான் கூறியுள்ள காரணம். அறிக்கை எப்படியிருந்தாலும், இவர்கள் குறிப்பிடும் கடிதம் வெளியாகி 3 தினங்களின் பின்னரே மறுப்பு அறிக்கை வெளியாகியிருப்பது, பலத்த குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த கடிதம் ஆப்கானின் எல்லைப்புற நகரங்களிலும், பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளிலுமே அதிகம் உலாவ விடப்பட்டுள்ளது. இவ்விரு பகுதிகளிலும்தான் தலிபான்களுக்கு அதிக செல்வாக்கு உள்ளது.
இந்தக் கடிதம் குறித்து அமெரிக்க அரசோ, சி.ஐ.ஏ.வோ கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. உளவு வட்டாரத் தகவல்களின்படி, தலிபான்களை பேச்சுவார்த்தை மேசைக்கு இழுக்கச் செய்யும் ஒருவித மனோதத்துவ உத்திதான் இந்த கடிதம் என்று சொல்கிறார்கள். குறிப்பிட்ட லெட்டர் சி.ஐ.ஏ.யின் தயாரிப்பாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம்.

