Published On: Saturday, March 10, 2012
இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவளிக்க கருணாநிதி அறிக்கை

(இந்தியாவிலிருந்து சாஹுல் ஹமீது)
திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் 2009ஆம் ஆண்டு விடுதலை புலிகளுக்கு எதிரான போரின்போது, மனித உரிமைகளை மீறும் வகையில் இலங்கை ராணுவம் போர்குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இலங்கை அரசு மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து பல நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சுட்டிக்காட்டி, ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் கொண்டு வரப்பட உள்ள தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும்போது, எக்காரணம் கொண்டும் இந்திய அரசு இலங்கை அரசை ஆதரிக்க கூடாது என்று வலியுறுத்தினேன்.
இந்த பிரச்னையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுமே, ஒருமித்த நிலைபாட்டை தெரிவித்திருக்கின்றன. இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றிய ஐ.நா. தீர்மானம் தொடர்பாக தமிழக மக்கள் உணர்வுகளின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இலங்கையில் இறுதி போரின்போது எடுக்கப்பட்ட வீடியோ கட்சிகளின் தொகுப்பு ஒன்றை, நான் பார்க்க நேரிட்ட போது என் கண்களில் வழிந்த கண்ணீர் இன்றும் நின்றபாடில்லை. மத்திய அரசில் இருப்போர் அந்த காட்சிகளை ஒரு முறை பார்த்தாலே, தமிழக மக்கள் சார்பில் வைக்கப்படும் கோரிக்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள முடியும்.
ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா தாக்கல் செய்த தீர்மானத்தில், சட்டத்துக்கு முரணாக மேற்கொள்ளப்பட்டதாக கருதப்படும் படுகொலைகள் மற்றும் ஏராளமானோர் காணாமல் போனதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். சர்வதேச சட்ட விதிகள் தீவிரமாக மீறப்பட்டது குறித்து இலங்கை அரசு அமைத்த குழு போதிய கவனம் செலுத்தவில்லை. அந்த குழுவின் திட்டங்களை நடைமுறைபடுத்த ஆலோசனைகளையும், தொழில்நுட்ப உதவிகளையும் ஐ.நா. மனித உரிமை ஆணையம் வழங்க வேண்டும். அதை இலங்கை அரசு ஏற்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, இலங்கை அரசு தமிழர்கள் மீது கட்டவிழ்த்திட்ட போர் குற்றங்களை இந்திய அரசு நினைவில் கொண்டு இனியும் காலம் தாழ்த்தாமல் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொடுத்துள்ள தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க போவதாக அறிவிக்க வேண்டும் என்று மீண்டும் ஒரு முறை வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன்.

