Published On: Saturday, March 10, 2012
இலங்கை தீர்மானத்தில் மதில்மேல் பூனையாக இந்தியா

(இந்தியாவிலிருந்து சாஹுல் ஹமீது)
இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்கும் படி மத்திய அரசை வலியுறுத்தக் கோரி தமிழக சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன. ஆனால் எதற்கும் இதுவரை பதில் வரவில்லை. இது குறித்து சென்னையில் பேசிய மத்திய அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, இந்த பிரச்சினையில் முடிவெடுக்கும்போது தமிழகத்தின் உணர்வு கருத்தில் கொள்ளப்படும் என்று கூறியுள்ளார். அதைவிட இலங்கை-இந்தியா இடையிலான உறவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கிஷ்ணா தெரிவித்துள்ளார்.
இலங்கை பிரச்சினையில் தமிழர்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் மத்திய அரசு இந்த முறையும் இலங்கைக்கு ஆதரவாகவே வாக்களிக்கும் என்று தெரிகிறது. வாக்களிக்க இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில், இதுவரை 22 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துவிட்டன. ஆனால் இந்தியா இதுவரை மௌனமாகவே உள்ளது.
எனவே, தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை உடனடியாக கூட்டி அதில், இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்கக் கோரும் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும், இதேக் கருத்தினை வலியுறுத்தி தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.