Published On: Saturday, March 03, 2012
கிருஷ்ணகிரியில் விபத்து, சிறுமி பலி 28 பேர் காயம்

(இந்தியாவிலிருந்து சாஹுல் ஹமீது)
பெங்களூரை சேர்ந்த தொழில் அதிபர் ஹரீஸ் (வயது 40) என்பவர் மனைவி மற்றும் உறவினர்களுடன் கோவில் விழாவுக்காக வேலூர் மாவட்டம் சோளிங்கர் அருகே உள்ள வீரகுப்பம் கிராமத்திற்கு ஜீப்பில் வந்து கொண்டு இருந்தார். ஜீப்பை ஹரீஸ் ஓட்டி வந்தார். இன்று அதிகாலை 5.45 மணியளவில் ஜீப் கிருஷ்ணகிரி, சென்னை தேசிய நெடுஞ்சாலை பெத்தாம்பட்டி என்ற இடம் அருகே சென்றது.
அதே போல் பெத்தாம்பட்டியில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு ஒரு மினி பஸ் தேசிய நெடுஞ்சாலையை கடந்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத ஜீப்பை ஓட்டி வந்த ஹரீஸ் மினி பஸ்சின் பக்கவாட்டில் உள்ள டீசல் டேங்கில் பயங்கரமாக மோதினார். இதில் டீசல் டேங்க் உடைந்து திடீரென தீ பிடித்துக் கொண்டது. இந்த விபத்தில் காரில் இருந்த மோனிசா (வயது 13) என்ற சிறுமி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டாள். மேலும் தீ பிடித்துக் கொண்டு எரிவதை பார்த்ததும் ஜீப் மற்றும் மினி பஸ்சில் இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தனர்.
இந்த விபத்தில் காரில் இருந்த தொழில் அதிபர் ஹரீஸ், அவரது மனைவி விஜயா (வயது 35), வாசு (வயது 35), பாபு (வயது 30), பத்மா (வயது 35), ஜான் (வயது 10), ரோகித் (வயது 9) மற்றும் 9 மாத கைக்குழந்தை ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மேலும் மினி பஸ்சில் இருந்த 20 பயணிகளும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் 28 பேரும் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காரில் வந்த 8 பேரும் மேல் சிகிச்சைக்காக பெங்களூர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஜீப், மினிபஸ் முற்றிலுமாக தீ பிடித்து எரிந்த தால் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதுபற்றி தெரிய வந்ததும் பர்கூர், மற்றும் கிருஷ்ணகிரியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஜீப்-மினி பஸ் முற்றிலுமாக எரிந்து எலும்புகூடாக காட்சியளித்தது. மோதிய வேகத்தில் டீசல் டேங்க் வெடித்து இருந்தால் மினி பஸ், மற்றும் ஜீப்பில் இருந்த அனைவரும் பலியாகி இருப்பார்கள். நல்ல வேளையாக மெதுவாக தீ பிடித்து எரிந்ததால் அனைவரும் காயத்துடன் உயிர் தப்பி விட்டனர்.
சம்பவ இடத்துக்கு கிருஷ்ணகிரி டி.எஸ்.பி. ரவிகுமார், டவுன் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியே பரபரப்படைந்தது. ஜீப் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த நேரத்தில் மினி பஸ் டிரைவர் அதை கவனிக்காமல் வேகமாக ரோட்டை கடந்தார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத ஜீப்பை ஓட்டி வந்த ஹரீஸ் மினி பஸ் மீது மோதாமல் இருக்க திடீர் பிரேக் போட்டார். ஆனாலும் மினி பஸ் பக்கவாட்டில் உள்ள டீசல் டேங்க் மீது பயங்கரமாக மோதி தீ பிடித்தது. இதையடுத்து ஜீப், மற்றும் மினிபஸ்சில் வந்தவர்கள் அலறினர். அனைவரும் அவசர அவசரமாக மினிபஸ்சை விட்டு இறங்கி உயிர் தப்பினர்.