Published On: Saturday, March 03, 2012
'பின்லேடன்' பற்றிய சினிமா படப்பிடிப்பில் கலாட்டா

பாகிஸ்தானில் அப்போதாபாத் நகரில் கடந்த ஆண்டு மே 2-ந் தேதி அமெரிக்க படையினரால் பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுபற்றி, ஆஸ்கர் விருது பெற்ற பெண் இயக்குனர் கேத்ரின் பிஜிலோ, ஒரு சினிமா எடுத்து வருகிறார்.
பஞ்சாப் மாநிலம் சண்டிகார் புறநகரில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போதாபாத் நகர் போல தோற்றம் அளிப்பதற்காக, பாகிஸ்தான் கொடிகளும், கடைகளில் உருது பெயர் பலகைகளும் வைக்கப்பட்டன.
இதை பார்த்த விசுவ இந்து பரிஷத் அமைப்பினர், படப்பிடிப்பு நடந்த இடத்துக்குள் புகுந்து கலாட்டாவில் ஈடுபட்டனர். கேமராமேன்களை பிடித்து தள்ளி விட்டனர். பாகிஸ்தான் கொடிகளையும், உருது பெயர் பலகைகளையும் அகற்றினர். இதனால் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு, படக்குழுவினர் கலைந்து சென்றனர்.
இதையடுத்து, படக் குழுவினருக்கு எதிராக புகார் செய்ய விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். பாகிஸ்தான் கொடியை பயன்படுத்த மாட்டோம் என்று படக்குழுவினர் உறுதி அளித்ததால் விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் கலைந்து சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை.