Published On: Friday, March 09, 2012
இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க ஓய்வு பெறுகின்றேன் - ராகுல் டிராவிட்

இளைஞர்களுக்கு இந்திய அணியில் அதிக வாய்ப்பு கிடைக்கும் வகையில் நான் ஓய்வு பெறுகின்றேன் என்று முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட்(39) சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இன்று ஓய்வு பெற்றார். இதற்கான செய்தியாளர் கூட்டத்தில் பிசிசிஐ தலைவர் சீனிவாசன், முன்னாள் இந்திய கேப்டன் அனில் கும்பளே ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய டிராவிட், இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் வகையில் நான் ஓய்வு பெறுகின்றேன் என்று தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது, நான் ஓய்வு பெற தகுந்த நேரம் வந்துவிட்டது. இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் வகையில் நான் தற்போது ஓய்வு பெறுவதே சரியான முடிவு. இந்தியாவுக்காக விளையாடியது எனக்கு பெருமையாக உள்ளது. பெருமையோடும் சோகத்தோடும் நான் ஓய்வு பெறுகின்றேன். எனது 16 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையில் நான் பலமுறை தோல்வி அடைந்துள்ளேன். ஆனால் எனது முயற்சியை மட்டும் நான் கடைசி வரை நிறுத்தவில்லை. இதுவரை என்னை வழிநடத்திய பயிற்சியாளர்களுக்கும், என்னை தேர்வு செய்தவர்களுக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். நான் விளையாடிய அணிக்கும், எனது கேப்டன்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவிக்கிறேன். மேலும் எனது ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவிக்கின்றேன். ஓய்வு பெற்ற பிறகு எனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட முடியும் என்று நினைக்கின்றேன் என்றார்.