Published On: Friday, March 09, 2012
பேரறிவாளன், முருகன் இருவருக்கும் பிளஸ் - 2

(இந்தியாவிலிருந்து சாஹுல் ஹமீது)
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு இன்று தொடங்கியது. வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் 8 கைதிகள் பிளஸ்-2 தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கு தேர்வுக்கான அனுமதி அட்டை விநியோகம் செய்யப்பட்டது. இதில் 6 கைதிகள் சென்னை புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதுகின்றனர்.
ராஜீவ் வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற கைதிகள் பேரறிவாளன், முருகன் ஆகிய 2 பேர் மட்டும் வேலூர் மத்திய சிறையில் தேர்வு எழுதினர். இதற்காக சிறையில் சிறப்பு தேர்வு அறை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தேர்வுக்காக அமைக்கப்பட்ட தனி அறையில் பேரறிவாளன், முருகன் ஆகியோர் தேர்வு எழுதினர்.
தேர்வை நடத்துவதற்காக ஒரு முதன்மை தேர்வு கண்காணிப்பாளர் தலைமையில் 4 பேர் கொண்ட குழு சிறையில் தேர்வை நடத்தும் பணியில் ஈடுபட்டனர். இருவரும் வரலாற்று பாடத்தை முதன்மையாக கொண்ட வரலாறு, வணிகவியல், கணக்கு பதிவியல், பொருளாதாரம், ஆகிய பாடப்பிரிவில் தேர்வு எழுதுகின்றனர். தமிழ் முதல்தாள் தேர்வு நடந்தது. 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. வினாத்தாள்களை பெற்ற பேரறிவாளன், முருகன் இருவரும் ஆர்வத்துடன் தேர்வை எழுதியதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

