Published On: Tuesday, September 27, 2011
அக்தார் மன்னிப்புக் கேட்கவேண்டும்

இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்" சச்சின் குறித்து, தனது சுயசரிதையில் தவறாக எழுதிய பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் சுகைப் அக்தார், மன்னிப்பு கேட்கவேண்டும்,'' என, மும்பை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் விலாஸ்ராவ் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் சர்ச்சைக்குரிய பந்துவீச்சாளர் சுகைப்ப் அக்தார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இவர், "கான்ட்ரவர்சியலி யுவர்ஸ்' என்ற பெயரில் சுயசரிதை எழுதியுள்ளார். இதில் இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் தனது பந்தை கண்டு பயந்தார் என்று குறிப்பிட்டுள்ளார். தவிர சச்சின், டிராவிட் இருவருக்கும் ரன்கள் மட்டுமே எடுக்கத் தெரியும், போட்டியை வெற்றிகரமாக முடிக்கும் "மேட்ச் வின்னர்' அல்ல என எழுதியுள்ளார். இதற்கு உலகின் முன்னணி வீரர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இதுகுறித்து மும்பை கிரிக்கெட் சங்க தலைவர் விலாஸ்ராவ் தேஷ்முக் கூறியதாவது: பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் அக்தர், தனது சுயசரிதையில் சச்சின் குறித்து தவறாக எழுதியது கண்டனத்திற்குரியது. உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான இவர், பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக விளங்குகிறார். இப்படிப்பட்ட ஜாம்பவான் குறித்து சுயலாபத்திற்காக சுயசரிதை எழுதுவது மன்னிக்க முடியாத செயல். இதற்கு அக்தர், சச்சினிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு தேஷ்முக் கூறினார்.