Published On: Tuesday, September 06, 2011
நின்றுகொண்டே மங்காத்தா பார்த்த சிம்பு

அஜித்தின் தீவிர ரசிகர் நடிகர் சிம்பு. இதை அவரே பல முறை தெரிவித்து உள்ளார். அஜீத் படங்களை முதல் நாளிலேயே தியேட்டரில் சென்று பார்ப்பது வழக்கம். மங்காத்தா படத்தையும் அது போல் பார்க்க ஆசைப்பட்டார். ஒஸ்தி படப்பிடிப்பு மைசூரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதில் நடித்துக் கொண்டிருந்த சிம்பு இயக்குநர் தரணியிடம் மங்காத்தா படம் பார்ப்பதற்காக சென்னை செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கேட்டார். தரணியும் சம்மதம் சொன்னார். உடனடியாக சென்னை பறந்து வந்த அவர் சத்யம் தியேட்டரில் மங்காத்தா படத்தின் முதல் காட்சியை பார்த்தார். அக்காட்சி முடிந்ததும் மீண்டும் இரண்டாவது காட்சியை தொடர்ந்து பார்க்க ஆசைப்பட்டார். ஆனால் டிக்கெட் கிடைக்கவில்லை.
இதையடுத்து தியேட்டரில் ஒரு ஓரமாக நின்று கொண்டே மங்காத்தா படத்தை இரண்டாவது தடவை பார்த்தார். இது குறித்து சிம்பு கூறும் போது மங்காத்தா படம் ரிலீசுக்காக காத்து இருந்தேன். மைசூரில் இருந்து ஒவ்வொரு நாளும் என் நண்பர்களிடம் பேசி மங்காத்தா படம் பற்றிய செய்திகளை கேட்டுக் கொண்டே இருந்தேன்.
காலை காட்சியாக படத்தை பார்த்தேன். பகல் காட்சிக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. எனவே நின்று கொண்டு பார்த்தேன். அஜீத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரசித்தேன். விசில் அடித்தேன். அவர் பஞ்ச் வசனங்களை கேட்டு துள்ளி குதித்தேன். அஜித் படங்களை பார்த்து உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் சந்தோஷப்படும் வழக்கம் என் சிறு வயதில் இருந்தே இருக்கிறது என்றார்.