Published On: Thursday, September 08, 2011
வருத்தத்தில் மங்காத்தா குழுவினர்

ஆகஸ்ட் 31 அன்று உலகம் முழுவதும் அஜித் நடித்த 'மங்காத்தா' திரைப்படம் வெளியானது.
இதில் அஜித்துடன் ஆக்ஷன் கிங் அர்ஜுன், த்ரிஷா, ஆன்ட்ரியா, லட்சுமி ராய், அஞ்சலி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர்.
வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கிரிக்கெட் சூதாட்ட பணத்தை கொள்ளையடிப்பதில் ஏற்படும் போராட்டம்தான் இந்த 'மங்காத்தா'. இதில் கெட்டவன் கேரக்டரில் வந்து அசத்தியிருப்பார் அஜித். இது அவரது 50-வது படம் என்பது குறிப்படத்தக்கது.
இப்படம் தமிழில் வெளிவந்ததை அடுத்து, விரைவில் 'கேம்ப்ளர்' என்ற பெயரில் தெலுங்கில் வர இருக்கிறது. தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, மலையாளத்திலும் இப்படத்தை டப் செய்து வெளியிட இருக்கிறார்கள்.
தெலுங்குப் படம் செப்டம்பர் 9- அன்று திரைக்கு வருகிறது. மலையாளப் படம் இதையடுத்து வெளியாக உள்ளது. இதனால் சந்தோஷமாக இருந்த படக்குழுவுக்கு பேரிடியாக அமைந்தது இந்த செய்தி: 'மங்காத்தா' படம் வெளியான ஆறாவது நாள் அதன் 'பக்கா' பிரிண்ட் நூற்றுக்கும் மேற்பட்ட இணையதளங்களில் உலா வர ஆரம்பித்துவிட்டது.
இதனால் படத்தின் வசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இணையதளங்களில் திருட்டுத்தனமாக புதிய படங்களை ஒளிபரப்புவது திருட்டு டிவிடியைவிட மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
'மங்காத்தா' வெளியான மிகச் சில தினங்களுக்குள் அதன் ஒரிஜினல் பிரிண்டே இணையதளங்களில் வெளியாகிவிட்டது. இதனால் தியேட்டருக்குப் போய் படம் பார்க்கும் இளம் தலைமுறையினர், டிக்கெட் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏதுமின்றி, வீட்டில் இணையதளம் மூலம் பார்த்துவிடுகின்றனர்.
இது தியேட்டர் ரிசல்டை கடுமையாக பாதித்துள்ளது. 'மங்காத்தா' வெளியானபோது அந்தப் படத்துக்கு தொடர்ந்து 5 நாட்கள் பெரிய ஓபனிங் கிடைத்தது. ஆனால் அடுத்த நாளே கமலா, காசி, உதயம் உள்ளிட்ட திரையரங்குகளில் ரசிகர்களின் வருகை கணிசமாகக் குறைந்து காணப்பட்டது.
மாலை காட்சிக்கு மட்டும் ஓரளவு நல்ல கூட்டம். செவ்வாய்க்கிழமையும் நிலைமை இதுதான். இதற்கான பின்னணியில் இணையதளத்தில் திருட்டுத்தனமாக படத்தை ஒளிபரப்பும் கும்பல் இருப்பதைக் கண்டு அதிர்ந்துள்ளது 'மங்காத்தா' குழு.
இதனால் ஹிட் படம் என்று அறிவிக்கப்பட்டுள்ள 'மங்காத்தா'வின் ஒட்டுமொத்த ரிசல்டே பாதிக்கும் நிலை உள்ளதால், போலீசாரிடம் புகார் தரவும் முடிவு செய்துள்ளார்களாம் வெங்கட் பிரபு மற்றும் குழுவினர்.