Published On: Tuesday, September 13, 2011
தினக்குரல் ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்

தினக்குரல் ஆசிரியபீட ஊழியர்கள் திங்கட்கிழமை முதல் வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்திருப்பதுடன் இன்னும் இரண்டொரு தினங்களில் கொழும்பு தொழில் திணைக்களத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரத போராட்டம் ஆகியவற்றையும் மேற்கொள்ளவுள்ளனர்.
சட்ட விரோதமான முறையில் தினக்குரல் ஊழியர்களை நிறுவனத்திலிருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதங்களை சமர்ப்பிக்குமாறு அழுத்தம் கொடுத்துவந்த தினக்குரல் நிர்வாகம் அவ்வாறு ராஜினாமா கடிதங்களை கொடுக்காத 30 ஊழியர்களை நிறுவனத்துக்குள் வர முடியாது என இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளதையடுத்தே தினக்குரல் ஆசிரிய பீட ஊழியர்கள் வேலை பகிஸ்கரிப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இதன் காரணமாக வீரகேசரி ஆசிரிய பீட ஊழியர்களை நாளையஇன்றை தினக்குரல் பத்தரிகையின் பதிப்பினை வெளியிட நடவடிக்கை எடுத்து, இன்றைய செவ்வாய் தினக்குரல் பத்திரிகை வீரகேசரி ஆசிரியர்களைக் கொண்டே வெளிவந்துள்ளது. இன்றைய தினக்குரலின் ஆசிரியர் தலையங்கமும் வீரகேசரி ஆசிரியர்களாலேயே எழுதப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தினக்குரல் நிறுவனத்தை கொள்வனவு செய்த வீரகேசரி நிறுவனம் தினக்குரல் பத்திரிகையை யூன் 30ஆம் திகதியிலிருந்து அதனை அச்சிட்டு வருகிறது. ஆனால் தினக்குரல் நிறுவனத்திலிருந்து விலகுவதாக ராஜினாமா கடிதங்களை சமர்ப்பிக்கும் ஊழியர்களுக்கு மட்டுமே வீரகேசரி நிறுவனத்தினால் நியமன கடிதம் வழங்கப்படும் என்ற நிபந்தனையை வீரகேசரி நிறுவனம் விதித்திருக்கிறது.
தினக்குரலை சிறிது காலத்தில் மூடுகின்ற சந்தர்ப்பத்தில் தினக்குரல் ஊழியர்களுக்கு பெரும் தொகை நஷ்ட ஈடு வழங்க வேண்டி இருக்கும் என்பதாலேயே முன் எச்சரிக்கையாக அவர்களிடம் இருந்து ராஜினாமா கடிதங்களை பெறுவதில் நிர்வாகம் உறுதிக்க இருந்து வருவதாக தெரியவருகிறது. தினக்குரல் ஆசிரியர் வி.தனபாலசிங்கத்தை ஓய்வுபெறுமாறு நிர்வாகம் நிர்ப்பந்தம் கொடுத்துவருவதும் தெரிந்ததே.
இதேசமயம் தினக்குரல் ஆசிரிய பீட ஊழியர்களுக்கு இழைக்கப்படும் அநீதி தொடர்பில் சுதந்திர ஊடகவியலாளர் சங்க பிரதிநிதிகள் இன்று திங்கட் கிழமை தினக்குரல் ஆசிரிய பீட ஊழியர்களை சந்தித்து தமது ஆதரவினை வழங்கியிருப்பதுடன் எதிர்கால போராட்டங்கள் குறித்தும் ஆராய்ந்துள்ளனர்.
தமிழ் மக்களின் விடுதலை போராட்டம் முக்கிய காலகட்டத்தில் இருந்த வேளை அப்போது ஒரேயொரு தேசிய தமிழ் பத்திரிகையாக இருந்த வீரகேசரி போராட்டத்திற்கான ஆதரவான போக்கினை கொண்டிராமையினால் அதிருப்தியுற்ற சில பத்திரிகையளர்கள் வீரகேசரியில் இருந்து வெளியேறி எஸ்.பி. சாமியின் ஆதரவுடன் தினக்குரல் பத்திரிகையினை ஆரம்பித்திருந்தனர்.
ஆனால் தற்போது வெறுமனே இலாப நோக்கத்திற்காக பல கோடி ரூபாய்களுக்கு தினக்குரல் பத்திரிகையை விற்று பெரும் தொகை பணத்தை சம்பாதித்துள்ள எஸ்.பி. சாமி அத்தனை பத்திரிகையளர்களையும் தற்போது நடுத்தெருவில் கைவிட்டுள்ளார்.
எனவே இது தொடர்பில் தமிழ் சமூக தலைவர்கள் தமது கண்டனத்தை தெரிவிப்பதுடன் இது விடயத்தில் தலையீடு செய்ய வேண்டும் என்றும் கொழும்பு தமிழ் ஊடகத்துறை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
அத்துடன் தினக்குரல் பிரதம ஆசிரியர் உதவி ஆசிரியர்கள் தினக்குரல் அலுவலகத்திற்குள் பிரவேசிக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது. தினக்குரல் பிரதம ஆசிரியர் தனபாலசிங்கம் உட்பட செய்தி ஆசிரியர் ஹரன், உதவி ஆசிரியர்கள், உட்பட 25க்கும் மேற்பட்ட ஆசிரியபீட உறுப்பினர்களையும் இம்மாதம் 14ஆம் திகதியிலிருந்து தினக்குரல் நிறுவனத்திற்குள் பிரவேசிக்க முடியாது என தினக்குரல் வெளியீட்டு நிறுவனத்தை வாங்கி வீரகேசரி நிறுவனம் தற்போது உருவாக்கியிருக்கும் ஏசியன் மீடியா பப்ளிகேசன் நிறுவனம் அறிவித்துள்ளது.
தினக்குரலின் ஏனைய பிரிவு ஊழியர்கள் இராஜினாமா கடிதங்களை வழங்கிய போதிலும் ஆசிரிய பீட ஊழியர்கள் இராஜினாமா கடிதங்களை வழங்க மறுத்து வந்தனர். தாம் பணியாற்றிய நிறுவனத்திலிருந்து இராஜினாமா செய்ய முடியாது என மறுத்து வந்தனர். இந்நிலையில் 14ஆம் திகதி முதல் தினக்குரல் நிறுவனத்திற்குள் பிரவேசிக்க கூடாது என வீரகேசரி நிறுவனமான ஏசியன் மீடியா நிறுவனம் அறிவித்தல் ஒன்றை தினக்குரல் அலுவலக அறிவித்தால் பலகையில் போட்டுள்ளனர்.
இது தொடர்பாக தினக்குரல் ஆசிரிய பீடத்துடன் நாம் தொடர்புகொண்டு கேட்டபோது; இந்த அறிவித்தலை கண்டு தாம் அதிர்ச்சியும் கவலையும் அடைந்திருப்பதாகவும், இதனால் இன்றிலிருந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் ஆசிரிய பீட உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
தாம் செவ்வாய் தினக்குரல் பத்திரிகையை வெளியிடப்போவதில்லை என்றும் அவ்வாறு நாளை தினக்குரல் வெளிவருமாக இருந்தால் அது வீரகேசரி நிறுவனமே வெளியிடும் என்றும் தினக்குரல் ஆசிரிய பீட உறுப்பினர்கள் தெரிவித்தனர்.